அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் மாணவர் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், 47 ஆண்டுகால விதிகளை மாற்ற, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பல்கலைகளின் இணைப்பு அந்தஸ்து பெற்று, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரத்துடன், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லுாரிகளின் நிர்வாக பணிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியம் போன்றவற்றுக்கான நிதியுதவி, அரசால் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லுாரி களின் நிர்வாக செயல்பாடுகளில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.
இந்த கல்லுாரிகள் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதால், அரசு நிதியுதவி வழங்கும் நோக்கத்தின்படி, மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் காக்கப்படுவதில்லை என, புகார்கள் எழுகின்றன.
குறிப்பாக, ஆசிரியர், பணியாளர் நலன்களில் உரிய விதிகளை பின்பற்றாதது, மாணவ --- மாணவியர் சேர்க்கையில், அரசு கல்லுாரிகளை போன்று வெளிப்படையாக இட ஒதுக்கீடு பின்பற்றாதது என, பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் வருகின்றன.
எனவே, அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் நிர்வாக செயல்பாடுகள், ஆசிரியர், பணியாளர் நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கை போன்றவற்றை முறைப்படுத்தும் வகையில், விதிகளில் திருத்தம் கொண்டு வர, தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த, 1976ம் ஆண்டு வகுக்கப்பட்ட அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான ஒழுங்குமுறை செயல்பாட்டு விதிகளை, 47 ஆண்டுகளுக்கு பின், மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக முதல் கட்ட ஆய்வு பணி துவங்கியுள்ளதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக