இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களுக்கு மடிக்கணினி எப்போது வழங்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

புதன், 14 ஜூன், 2023

 



தமிழ்நாட்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.


அதன்படி, 2019ஆம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம் மாணவ,மாணவிகளுக்கு இலவசமடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.


கைவிடப்பட்டதா இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்?


கொரோனா தொற்று பரவலால் மடிக்கணினி கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் உலகளவில் மடிக்கணினி தயாரிப்புக்கு தேவையான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் அதன் விலை வெகுவாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.


இதனிடையே, மடிக்கணினிக்கு பதிலாக டேப்லெட் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை. சர்வதேச மந்தநிலை காரணமாக கொள்முதலில் தாமதம் நிலவுகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்த நிலையில், பள்ளிகள் திறப்பையொட்டி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லேப்டாப் எப்போது வழங்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்:


அதற்கு பதில் அளித்த அவர், "நிதி நிலைமை, லேப்டாப் தயாரிக்க மூலப்பொருள்கள் உள்ளிட்டவற்றை பொறுத்து இந்த கல்வி ஆண்டில் லேப்டாப் வழங்கப்படும். டேப் வழங்கலாமா எது உபயோகிக்க ஏற்றதாக இருக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது" என்றார்.


மாநிலக் கல்விக் கொள்கை ஜூன் மாதம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "மாநிலக் கல்விக் கொள்கைக்காக அமைக்கப்பட்ட குழுவில் புதிதாக இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அறிக்கை தயார் செய்த பின்னர் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.


உடற்கல்வித்துறைக்கு தனியாக பாட புத்தகங்கள் ஏற்படுத்துவது குறித்து 15 ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது போல் டெட் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு இல்லாமல் செயல்பட கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.


11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இருக்குமா இல்லையா என்பது குறித்து மாநில கல்விக் கொள்கை முடிவு செய்த பின் தெரிவிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 8340 நடுநிலை பள்ளிகள், 3547 உயர்நிலை பள்ளிகள், 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டில் 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.


கடந்த ஆண்டை விட சிறப்பாக செயல்பட்டு இந்த ஆண்டு அதிக தேர்ச்சி விகிதத்தை காட்ட வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் பள்ளி மாணவர்களின் நலனுக்கு தேவையானதை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். முதலாம் வகுப்புக்கு 1,31,000 மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர். முதல் முறையாக பள்ளி தொடங்கிய நாளே பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன ஜூலை மாத இறுதிக்குள் முழு சீருடையும் வழங்கப்படும்" என்றார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent