இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பணிகளுக்கான தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க முடிவு

ஞாயிறு, 9 ஜூலை, 2023

 




அரசு பணிக்கான ஆட்சேர்ப்பில் மோசடி மற்றும் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்றவற்றை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.


மத்திய அரசு நடத்தும் அரசுப் பணிக்கான தேர்வு களில் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். எழுத்து முறையில் நடந்த தேர்வு, தற்போது கணினி வாயிலாக 'ஆன்லைன்' முறையில் நடந்து வருகிறது.


குற்றச்சாட்டு

இருப்பினும், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியாகி, மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.


அரசு பணிக்கான ஆட்சேர்ப்பின் போதும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் குவிந்தன.


இந்நிலையில் வினாத்தாள் கசிவு, ஆட்சேர்ப்பு மோசடி நடப்பதற்கான காரணங்களை பட்டியலிட்ட பணியாளர் மற்றும் பயிற்சி துறை செயலர் ராதா சவுகான், அவற்றைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சகங்களுக்கு நேற்று கடிதம் எழுதிஉள்ளார்.



அதில் அவர் கூறியுள்ளதாவது:


அரசு ஆட்சேர்ப்புக்கான தேர்வுகளில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.


தேர்வு நேர்மையாக நடப்பதை உறுதி செய்வதற்கு உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


தேர்வு நடத்தும் அமைப்புகள், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பான செயல்முறைகளை 'அவுட்சோர்ஸ்' செய்கிறது.



நடவடிக்கை

இந்த நிறுவனங்கள் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளை உள்ளூர் நிறுவனங்களிடம் பகிர்வதால் மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது.


தேர்வின்போது, கணினியை 'ரிமோட் அக்சஸ்' எனப்படும் யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும் முறையில் மாற்றம் அவசியம். அதேபோல், கணினிகளில் உள்ள காலாவதியான அல்லது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்படும் 'ஆபரேடிங் சிஸ்டம்' வாயிலாக மோசடிகள் நடப்பதற்கு வாய்ப்பு அதிகம்.


தேர்வு மையங்களில் உள்ள கணினிகளில் வைரஸ்களை அழிக்கும் மென்பொருள் பயன்படுத்தப்படாமல் இருப்பதும், வினாத்தாள் வெளியாவதற்கு வழிவகுக்கும்.


நாடு முழுதும் இருக்கும் தேர்வு மையங்களில் உள்ள கணினிகளை இணைக்கும் நெட்வொர்க் முறையில் உரிய பாதுகாப்பு இல்லாததால், வெளியில் இருப்பவர்களால் எளிதில் அணுக முடிகிறது.


எனவே, மோசடிக்கான காரணங்களை மதிப்பீடு செய்து, அவற்றை சரி செய்யும் அவசர நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent