இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகள்தோறும் பயனற்றுக் கிடக்கும் விலையுயர்ந்த குப்பைகள்

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

 



இருபத்தோராம் நூற்றாண்டு அறைகூவல்களை எதிர்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகள் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தல்கள் தொடர்ந்து மெல்ல நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய திரையுடன் கூடிய ஒளிப்பட வீழ்த்தி (Overhead Projector), மேசைக் கணினிகள்(Desktop), ஒளி நகல் மற்றும் அச்சு இயந்திரம் (Xerox Machine with Printer),  


கைக்கணினி (Tablet), மடிக்கணினி (Laptop), திறன்மிகு வகுப்பறை(Smart Class), LED தொலைக்காட்சி, நகல் படியாக்க எந்திரம் (Scanner with Printer) ...என ஏராளமான கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பப் பயன்பாடுகளை அதிகரித்து மேம்படுத்தும் நோக்கில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் கடந்த இருபதாண்டுகளில் அவ்வப்போது அரசால் வழங்கப்பட்டு வந்திருக்கும் நவீனக் கருவிகள் ஆவன. 


இவையனைத்தும் ஏனோதானோவென்று ஏதேனும் டுபாக்கூர் கம்பெனிகளான மன்னார் அன்ட் கோ இல் முறைகேடாக வாங்கி வழங்கப்பட்ட பொருள்கள் அல்ல. எல்லாமும் நிதி நெருக்கடிகளைக் கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறைக்கு அள்ளியள்ளிக் கொடுக்கப்பட்டதில், உலக அளவில் தரமான,  நற்பெயர் மிக்க, மிக அதிக விலையுயர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் என்பது கவனத்திற்குரியது. 


சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பள்ளிகள் தோறும் பொருள்கள் வழங்கப்பட்ட கையோடு வருகை புரிந்து அவற்றைக்  கையாளும் வழிமுறைகள் குறித்து அவ்வக் காலங்களில் பணியாற்றிய ஆசிரியர் பெருமக்களிடம் எடுத்துக்கூறி மாதிரி செயல் விளக்கம் செய்து காட்டிச் சென்றுள்ளதும் அறியத்தக்கதாகும். 


இதுதவிர, அப்பள்ளிகள் சார்ந்த ஒன்றியங்களில் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் திறமையும் அனுபவமும் பயிற்சியும் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் உரிய நிறுவனங்கள் சார்ந்த தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆகியோர் மூலமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பொறுப்புமிக்க ஆசிரியர்கள் மேலும் பயிற்றுவிக்கப்பட்டனர்.  தொடக்கத்தில் பழுது சார்ந்து விடுக்கப்பட்ட அழைப்புகளுக்குச் செவிமடுத்து ஓரிரு நாள்களுக்குள்ளாகப் பழுதுநீக்கிச் சென்றதும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோக, அனைத்து நடுநிலைப்பள்ளிகளில் நிறுவப்பட்ட கணினி கற்றல் மையங்களில் (CAL CENTRE) உள்ள குறைந்தபட்சம் ஐந்து மேசைக் கணினிகளைத் திறம்பட இயக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து ஆசிரியர்களுக்கும் சுழற்சி முறையில் பத்து நாள்கள் தாமே செய்து கற்றல் அடிப்படையில் பயிற்சி வழங்கப்பட்டது. பிறகு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இது நீட்டிக்கப்பட்டதுடன் புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட்ட நபர்களுக்கும் சுடச்சுட இப்பயிற்சி கொடுக்கப்பட்டது நினைவுகூரத் தக்கது. 


அதாவது தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு தொடக்கக்கல்வி ஆசிரியரும் கணினிகளைக் கையாளுதலில் போதிய திறம் வாய்ந்தவர்களாகத் திகழ வேண்டும் என்பது அரசின் தொலைநோக்கு இலக்காக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் எந்த அளவிற்கு இதுகுறித்த நிலையை எட்டி இருப்பார்கள் என்பது பற்றி உங்கள் அறிவிற்கு விட்டு விடத் தோன்றுகிறது. 


ஏனெனில், இன்னும் பேருந்து கூட நுழைய முடியாத குக்கிராமங்களில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கே மேற்குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப மின்னணுக் கருவிகள் போய்ச் சேர்ந்திருக்கும் நிலையில் பேருந்து வசதிகள் கொண்ட உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் இதுபோன்ற எத்தனை வசதிகள் கிடைக்கப் பெற்றிருக்கும்? 


சரி. இவையனைத்தும் முறையாக வகுப்பறைகளில் பயன்படுத்தப்பட்டனவா? என்பதும் மாணவர்கள் அதுகுறித்த தொழில்நுட்பம் சார்ந்த அறிவையும் அடைவையும் பெற்றிருந்தார்களா? என்பதும் கற்பித்தலுக்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு மிகவும் சிக்கலான பள்ளி நிர்வாகத்தினை எளிமையாக்கிப் ஆசிரியர் பணிச்சுமையினை இலகுவாக்க இவை எந்த வகையில் உதவிக்கரமாக இருந்து வந்தன; வருகின்றன என்பதும் பெரிய கேள்விக்குறி ஆகும். 


இக்கருவிகளின் தற்போதைய நிலைமை குறித்து ஈண்டு ஆராய வேண்டிருக்கிறது. அவை முதலில் பழைய உயிர்ப்புடன் தற்போது இயங்கத்தக்க அளவில் மீளவும் பயன்படுத்தும் வகையில் இருக்கின்றனவா என்று முறையாகப் பரிசோதிக்க வேண்டியது அரசின் முழுமுதற் கடமையாகும். 


அண்மைக்காலமாக தமிழ்நாடு முழுவதும் கோலாகலம் பூண்டு காணப்படும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு உரிய இணைய வழி விண்ணப்பப் பதிவில் தொடு உணர் கருவியின் பயன்பாட்டின் தேவை கருதி மந்த்ரா கருவிகள் (Mandra Device) கொள்முதல் செய்ய ஆகும் செலவினைக் கருத்தில் கொண்டு தடுமாறிய பொழுதில் கடந்த ஆட்சியில் தொடக்கப்பள்ளிகள் தவிர்த்த ஏனைய பள்ளிகளில் ஆசிரியர் வருகையை ஒழுங்குப்படுத்தும் பொருட்டு வழங்கப்பட்டு தற்போது முடங்கிக் கிடந்தவற்றைத் தூசு தட்டி, கோரிப் பெற்று மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு பயன்பாட்டிற்கு மடைமாற்றம் செய்யப்பட்டிருப்பது எண்ணத்தக்கது. இது வரவேற்கத்தக்கதும் கூட. 


அதுபோல், தற்போது தொடக்கநிலையில் எண்ணும் எழுத்தும் திட்டம் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் அனைவருக்கும் கைக்கணினி தரவிருப்பதாகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 


இதற்கு நடுநிலைப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இல்லாத கைக்கணினிகளின் தரத்தையும் அதன் இயங்கும் தன்மையையும் நன்கு பரிசோதித்துப் மீளப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இதுபோன்ற பயன்மிகு நடவடிக்கைகளால் தேவையற்ற, பயனற்றுக் கிடக்கும் மின்னணுக் கருவிகள் சார்ந்த குப்பையினைத் தவிர்க்க முடியும். மேலும், அரசுக்கு ஏற்படும் வீண் செலவுகளும் குறையும். பொதுமக்களின் வரிப்பணமும் விழலுக்கு இரைத்த நீராக வீணாவதிலிருந்து காக்கப்படும்.


இதில் வேதனை மிகுந்த சேதி என்னவென்றால், இந்த விலையுயர்ந்த மின்னணு கருவிகள் யாவும் பள்ளி நிர்வாகம், வகுப்பறை கற்பித்தல் மற்றும் மாணவர் கற்றலில் பயன்பாடுகள் காரணமாக அதிகம் கையாண்டு பழுதானது என்பது அரிது. பெரும்பாலும் உரிய வகையில் பயன்படுத்தப்படாமலும் எந்த நோக்கத்திற்காக அளிக்கப்பட்டதோ அதுவும் நிறைவேற்றப்படாமலும் இறுக்கிப் பூட்டிய அறைக்குள் போர்த்திப் பாதுகாக்கும் போர்வைக்குள் நாதியற்றுக் கிடக்கும் தூசுகள் படிந்த உயிரற்ற சடலங்களாக இருந்து வீணாகியது தான் அதிகம். 


இதற்கு மிக முக்கியமான காரணியாக அமைவது சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பலரிடையே மலிந்து காணப்படும் நல்ல பாதுகாப்பாளர் (Good Guardian) என்கிற எண்ணமும் பய உணர்வும் ஆகும். மேலும், பள்ளி இருப்புப் பதிவேட்டில் உள்ளவற்றை அடுத்து வரவிருக்கும் தலைமையாசிரியர் வசம் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஒப்படைத்து விட வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருப்பதுதான் மூல காரணம் என்பது திண்ணம். மின்னணு கல்வி உபகரணங்கள் அதிகம் பயன்படுத்தினால் மட்டுமல்ல அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் வீணாகப் பயனற்றுப் போகும் என்பதையும் புரிந்து கொள்வது நல்லது. அரசின் நோக்கமும் அஃதல்ல. அதுவாகவும் ஒருபோதும் இருக்க முடியாது.


கல்வியின் குறிக்கோள் பயன்பாட்டில் உள்ளது. கல்வி சார்ந்த பொருள்களின் தன்மையும் அவ்வாறே. ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பயன்படுத்தப்பட்டு பழுதாவதை விட யாராலும் கையாளப்படாமல் காலாவதி ஆவது என்பது வருந்தத்தக்கதாகும். பொதுவிநியோகம் உள்ளிட்ட பொதுத் துறைகளில் இருப்பது போன்று உடைந்த, பழுதான, பயன்பாட்டில் இல்லாத இருப்புப் பதிவேட்டில் உள்ள பொருள்களுக்குத் தண்டம் கட்டி அழும் நிலை ஒருபோதும் கல்வித்துறையில் காணப்படுவதாகக் கேள்விப்பட்டதில்லை. 


இந்த நிலையில், பல்வேறு பள்ளிகளில் இப்பொருள்கள் சார்ந்த மின்னணுக் கழிவுகள் இடத்தை அடைத்துக் கொண்டு காணப்படுவது வேதனைக்குரியது. இலட்சத்தைக் கடந்த விலை மதிப்புடைய திறன்மிகு வகுப்பறை வளங்களுள் ஒன்றாக விளங்கும் தொடுதிரை கணினிப் பலகைகள் தொடர் பயன்பாடுகளின்றியும் இயற்கைப் பேரிடர் மிகுந்த மழை மற்றும் பனிக் காலங்கள் காணப்படும் ஈரப்பதம் காரணமாக உள் மின்னணு பொருள்களில் பூஞ்சைகள் பரவி இயங்காத நிலை ஏற்படுகிறது. 


இவற்றைப் பழுது நீக்கி மீண்டும் பழையபடி இயங்கச் செய்திட போதிய ஆள்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. வட்டார அளவில் இதுபோன்ற சாதனங்களைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் வருகை புரிந்து சரிசெய்ய தக்க அளவில் உரிய உகந்த பழுதுநீக்குவோரை அடையாளம் கண்டு நியமித்திடவும் தக்க மதிப்பூதியம் வழங்கிடவும் பள்ளிக்கல்வித் துறை முன்வர வேண்டும். 


தவிர, ஆசிரியர்கள் இவற்றைக் கையாளுதலில் சுணக்கம் காட்டுவதும் உள்ளது. எனினும், இது வேண்டுமென்று நிகழ்வதாகத் தெரியவில்லை. நடப்பில் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துக் காணப்படுகிறது. பள்ளிப் பதிவேடுகளோடும் இணையவழியிலான பதிவுகளோடும் நாள் முழுவதும் மல்லுக்கட்டவே அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. வேலியில் ஓடும் ஓணானை வேட்டியில் இழுத்துவிட்ட கதையாக, வெற்றுத் தம்பட்டங்களுக்கிடையில் கற்பித்தலும் கற்றலும் வகுப்பறையில் உண்மையில் சுருங்கிப் போய்விட்டது. 


அதையும் இதையும் கொட்டி உப்புச் சப்பில்லாத உடலுக்குக் கேடு தரும் துரித வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் துரித உணவு மாதிரி துரித கற்பித்தலில் மிகத் துரித கற்றல் மின்னல் வேகத்தில் நிகழ வேண்டும் என்று நினைப்பதும் அதற்காக அதிகாரச் சாட்டை எடுத்துச் சுழற்றுவதும் அபத்தம். 


செக்குமாடு போன்று ஆசிரியர்கள் எமிஸை (EMIS) கட்டிக்கொண்டு புலம்பி வருகின்றனர். இதற்கும் மேலாக, ஆசிரியர்களை வாட்டி வதைக்கும் எண்ணும் எழுத்தும் கருத்தாக்கத்தை அதிசயிக்கத்தக்க ஆணிவேர், சல்லிவேர் என்று மெய்யான கள நிலவரம் அறியாமல் போற்றிப் புகழ்வதில் ஒரு பயனும் இல்லை. 


இன்றைய சூழலில் ஓர் ஆன்ட்ராய்டு தொழில்நுட்ப கைப்பேசி ஐம்பதிற்கும் மேற்பட்ட கருவிகளின் வேலைகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது. அதை விஞ்சும் வகையில் ஆசிரியர்களின் நடப்பியல் உள்ளது. கிடைக்கும் சொற்ப நேரத்தில் பாடத்தைப் போதிப்பதா? பாழாகிக் கிடக்கும் இதுபோன்ற கருவிகளின் பழுதைப் போக்குவதா? என்பது புரியாமல் கையறு நிலையில் தவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 


ஆகவே, தற்போதைய பயன்பாட்டில் இல்லாத, பழுது நீக்க முடியாத, மிகக் கூடுதலான செலவை இழுத்து விடக்கூடிய வேண்டாத மின் குப்பைகளாகக் கிடக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி உபகரணங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டு தலைமையாசிரியர்களை விடுவிப்பது என்பது இன்றியமையாதது. 


பள்ளியின் நிர்வாகத் தலைவராக விளங்கும் தலைமையாசிரியர்களும் அவற்றை ஏதோ செம்மை மிகுந்த புதையலைக் காப்பது போல் கண்ணும் கருத்துமாகக் காக்க நினைத்துக் கல்வியை வறிய நிலைக்குத் தள்ளுவதிலிருந்து விடுபடுதல் அவசியம். தரமான கல்விக்கான கற்றல் உபகரணங்கள் மாணவர் கரங்கள் படக்கூடாத வெற்று அருங்காட்சியகப் பொருள்கள் அல்ல.


- எழுத்தாளர் மணி கணேசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent