பள்ளிகளில் சாதிய பாகுபாடு அட்டவணையை வெளிப்படையாக வைத்திருப்பதால் எதிர்மறை விளைவுகள் உருவாகும் வாய்ப்புள்ளதாக அம்பா சமுத்திரத்தை சேர்ந்த வாசகி தங்கம், ‘இந்து தமிழ்’ உங்கள் குரல் பகுதியில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய அடிப்படையில் மாணவர்களிடையே நடைபெற்றுள்ள மோதல் சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்றபோது, அங்குள்ள அலுவலக கரும்பலகையில், அப்பள்ளியில் வகுப்பு வாரியாக, பிரிவு வாரியாக படிக்கும் ஆண்கள்,
பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களுடன், அவர்களில் உயர் சாதியினர், பிற்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், தலித் சமூகத்தினர் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரங்களை வெளிப்படையாக அட்டவணையாக எழுதி வைத்திருந்தனர். சாதி வாரியாக மாணவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை இப்படி வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும்படி அட்டவணையாக வைத்துள்ளீர்களே என்று கேட்டபோது, பள்ளி கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில்தான் அவ்வாறு அட்டவணை வைத்துள்ளதாக பதில் தெரிவித்தனர்.
சாதிய பாகுபாடு அதிரிக்கும்: சாதி பாகுபாட்டோடு வளர்க்கப்படும் மாணவர்கள், இந்த அட்டவணையை பார்க்கும்போது, இயற்கையாகவே அவர்களுக்குள், தனது வகுப்பில் எந்தெந்த சாதி மாணவர்கள் பயில்கிறார்கள், யார், யார் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டு, தேடுவார்கள். இதனால் அவர்களுக்குள் சாதிய பாகுபாடு அதிகரிக்கும்.
இத்தகைய அட்டவணை மூலம், வெளிப்படையாக மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாட்டை உருவாக்கவும், இதனடிப்படையில் அவர்கள் செயலாற்றும் தன்மையை ஏற்படுத்தவும் நாமே வழிவகுப்பதுபோல் இருக்கிறது. இது போன்ற சாதி ரீதியிலான அட்டவணையை அலுவலகத்தில் கோப்புகளாக பராமரித்தால் மட்டும் போதுமானது. அதை வெளிப்படையாக வைக்க வேண்டுமா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை யோசிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
சாதி பாகுபாடு இருக்க கூடாது என்று மாணவர்கள் மத்தியில் போதிக்கும் பள்ளிகளில் சாதி ரீதியிலான பாகுபாடு குறித்த அட்டவணையை வெளிப்படையாக வைப்பதை தடுக்க அரசும், பள்ளி கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக