இந்த வலைப்பதிவில் தேடு

மாநில கல்வி கொள்கை தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கியது: குழு உறுப்பினர் ஒப்புதலுக்கும் ஏற்பாடு

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

 



மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குழுவினரின் ஒப்புதல் பெறுவதற்காக 30ம் தேதி கூட்டம் நடக்க இருக்கிறது. 


கடந்த 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கல்வித்துறைக்காக மாநில கல்விக் கொள்கை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் என பலதரப்பிலும் கருத்து கேட்டுப்பெற்றுள்ளது.


அதன் தொடர்ச்சியாக 13 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்களும் கல்வி தொடர்பான பிரச்னைகளுக்கு அந்தந்த துறைகளுடன் தொடர்பு கொண்டு தீர்வுக்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் வெவ்வேறு வகையான 50 பள்ளிகள், 15 கல்லூரிகள், 5 பல்கலைக் கழகங்களை தேர்வு செய்து அவை எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அதை தீர்ப்பதற்கான வழிகளையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறது. 


இவற்றுடன் சேர்த்து பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் இணைத்து மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது.


இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பரிந்துரைகள் மீது குழுவின் உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் அறிந்து செயல்பட வேண்டிய நிலையில் குழு இருக்கிறது. அதனால், வரும் 30ம் தேதி மேற்கண்ட குழுவின் கூட்டம் கூட்டப்பட உள்ளது. 


அப்போது 14 உறுப்பினர்கள், 13 துணைக்குழுக்கள் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்து, குழு தயாரித்துள்ள பரிந்துரைகள் மற்றும் அம்சங்கள் மீது ஒப்புதலும் தெரிவிக்க உள்ளனர். அதன் பிறகே மாநிலக் கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent