இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் போற்றுவோம்!

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

 

ஒரு நாடு நன்கு வளர்ச்சி பெற வேண்டுமாயின் சிறப்பான கல்வி வேண்டும். கல்வி போதிக்கும் பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் நாடெங்கும் பரவி இருத்தல் வேண்டும்.


கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

என்பது வள்ளுவர் வாக்கு, இங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல நூல்கள் தோன்றி நல்லறம் போதித்து வந்துள்ளது. அந்த வகையில் பிற்காலத்தில் எழுந்த ஒரு நூல் 'அறப்பளீசுர சதகம்' என்ற நூலாகும். தமிழில் சிற்றிலக்கியங்கள் பல தரத்தின, வகையின, காலத்தன. இவ்வகை இலக்கியங்களைப் பிரபந்தங்கள் என்பர். அவை 96 வகைப்படுமென்றும் அதற்கும் மேற்பட்டு இருக்கலாம் என்றும் கூறுவர். அறிஞர் பெருமக்கள். இவற்றுள் ஒன்றுதான் சதகம், நூறு பாடல்கள் கொண்டது சதகம்.


அறப்பளீசுர சதகம் என்னும் இந்நூலானது கொல்லி மலையில் அமைந்துள்ள அறப்பள்ளி ஈசுவரன் மீது அம்பலவாணக் கவிராயர் எனும் புலவரால் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்றது. இவர் சீர்காழி அருணாசலக் கவிராயர் என்பவருடைய மகனாவார். சிறந்த நீதி நூலான இதில் ஒரு நல்ல அரசு, நகரம் எவ்வாறு அமைய வேண்டும், அரசிற்கு ஆலோசனை சொல்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், நல்லோர் இயல்பு, நல்வினை, தீவினை, வறுமையின் கொடுமை, உடன்பிறப்பு, பொருள் சேர்த்தல், சிறந்த மருத்துவர், வணிகர்கள், வேளாளர்கள், அமைச்சர், படைத்தலைவர் இவர்கள் எல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றது. 


இவற்றுள் ஒன்றுதான் ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதாக இதில் கூறப் பெறுகின்றது. அதுமட்டுமின்றி ஒரு நல்ல மாணவன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.


வேதாந்த சித்தாந்த வழிதெரிந் தாசார

விவரவிஞ் ஞான பூர்ண

வித்யா விசேசசற் குணசத்ய சம்பன்ன

வீரவை ராக்கிய முக்கிய

சாதா ரணப்பிரிய யோகமார்க் காதிக்ய

சமாதினிஷ் டானுபவ ராய்ச்

சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர

தருமமும் பர சமயமும்

னீதியு லுணர்ந்துதத் துவமார்க்க ராய்பிரம

நிலை கண்டு பாச மிலராய்

நித்தியானந்தசை தன்யரா யாசையறு

நெறியுளோர் சற்குரவராம்

ஆதார மாயுயிர்க் குயிராகி யெவையுமா

மமலவெம தருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே


உலகிற்கு ஆதரவாய். உயிர்களுக்கு எல்லாம் உயிராகி, எவ்வகைப் பொருளும் ஆகிய தூய பொருள் எமது தேவனே, வேதாந்த சித்தாந்த நெறிகளை ஆராய்ந்து அறிந்து ஒழுக்கத்தெளிவு, விஞ்ஞானத்தின் நிறைவு, கல்விச்சிறப்பு, நற்பண்பு, உண்மையாகிய செல்வம், உறுதியான வீரம், தலைமை, அருள், யோக நெறியிலே மேன்மை, மேலான மந்த்ர தந்திரம், அறுசமயத்தன்மை, பிற மதங்களையும் நெறிப்படி அறிந்து உண்மை நெறியினராய், தூய பொருளின் நிலை அறிந்து, பற்று நீங்கியவராய் உண்மை இன்ப அறிவு உருவினராய், பற்றற்ற நெறியில் நிற்போரே நல்லாசிரியர் என்பவராவர். 


முப்புரங்களை நீறுபடச்செய்த பெரியோனே, தலைவனாகிய எமது தேவனே, திட்டினும், ஏதேனும் கொடுமை செய்திடினும், மாறாமல் சினந்து பேசிடினும்  சிறிதும் மனங்கோணாமலும், வெட்கப்படாமலும், உண்மையாக எனக்கு அன்னையும், தந்தையும் நீயே என்று கூறி மனங்கனிந்து வழிபாடு செய்து என் பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்று கூறி கொடுத்து இரவும் பகலும் விடாமல் வணங்கி ஆசிரியரின் மலர் போன்ற திருவடிகளில்  விழுந்து வணங்கி அறிவு பெற விழைவோர் நல்ல மாணவராவர். அத்தகு மாணவருக்கு வினையின் வேர் கெடும்படி அருள்செய்வது சிறந்த ஆசிரியரின் கடமை என்கின்றது அறப்பளீசுர சதகம்.


உ.வே.சாமினாதையர் தன் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டி தான் நடந்து கொண்டவிதம் பற்றி தன்னுடைய என் சரிதம் நூலில் பதிவு செய்துள்ளார், பிள்ளையவர்கள் வீட்டின் பின்புறத்தில் பெரிய தோட்டமும், குளமும் உண்டு. வீட்டுத்தோட்டத்தில் மரம் செடி கொடிகளையும் வளர்த்து வருவதில் அவருக்கு நிறைய ஆசை உண்டு.


காலை, மாலை இரு வேளையும் தோட்டத்திற்குச் சென்று செடி கொடிகளைப் பார்வையிடுவது அவருடைய வழக்கம், மாலை நேரங்களில் அவரே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதும் உண்டு, அவ்வேளைகளில் செடிகளில் வளர்ந்து வரும் தளிர்களைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைவார். 


இதனைக் கண்ட நான் அடுத்த நாள் காலையில் எழுந்த உடனேயே தோட்டத்திற்குச் சென்று செடிகளுக்கு நீர் ஊற்றி வந்தேன், அதன் பிறகு தோட்டத்திற்கு வந்த பிள்ளையவர்கள், ஒவ்வொரு செடியாகப் பார்த்துக்கொண்டே வந்தார். செடிகளில் தளிர் இருப்பதைக் கண்டால் ஆனந்தம் அடைவார். 


ஏதாகிலும் ஒரு செடி பட்டுப்போய் இருப்பதைக் கண்டால் அவர் மனம் வாடத்தொடங்கி விடும், அதே நேரத்தில் பட்டுப்போயிருந்த செடி தளிர் விட்டிருந்தால் பெரும் மகிழ்ச்சிகொள்வார். அதனை அறிந்த நான் பட்டுப்போய் இருந்த ஒரு செடியில் தளிர் விட்டிருந்ததை அவரிடம் காண்பித்தேன். ஆகா, இது எப்படி துளிர்த்தது என்று என்னிடம் வினவினார். நான் அச்செடிகளுக்கு முன்பே வந்து தண்ணீர் ஊற்றியதைத் தெரிவித்தேன். அது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.


இச்செயலால் ஆசிரியரின் மனதில் இடம்பிடித்துவிட்டோம் என்ற எண்ணம் எனக்கு அளவிடமுடியாத மகிழ்வினை உண்டாக்கியது. அதையும் தாண்டி தினந்தோறும் அவரோடு நான் பேசுவதற்கான வாய்ப்பும் இதனால் கிட்டியது, பல வேளைகளில் பாடம் கேட்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாகவே இச்செயல் அமைந்தது.

ஒரு காலத்தில் இன்னாரின் மாணவர் இவர், இவருடைய மாணவர்கள் இவர்கள் என்று ஆசிரியர் பெயர் கொண்டு மாணவர்கள் அழைக்கப்படுவது பெரும் மதிப்பிற்குரிய ஒன்றாகவே இருந்தது, அன்றைய நாளில் ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பாகவும், போற்றுதலுக்குரியதாகவும் இருந்து வந்தது, மீண்டும் அந்த நிலையினை எட்டுவதற்கு முயல்வோம். கல்வியில் சிறந்த முன்னேற்றம் காண அவ்வுறவு பெரிதும் பயன்தரும். 

[கட்டுரையாளர் - தமிழ் பண்டிதர் சரசுவதி மகால் நூலகம், 

தஞ்சாவூர்].


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent