எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் ஆசிரியர்களை பழி தீர்ப்பதாக நினைத்து, எதிர்கால தலைமுறையை பலியாக்குவதை நிறுத்த வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சமன் செய்யும் வகையில் குறைந்த அளவிலான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக கூறி தமிழக அரசு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தொடக்கக் கல்வியில் அறிமுகப்படுத்தியது. இது குறுகிய காலத் திட்டம் மட்டுமே என்று கூறி 1முதல்3 வகுப்பு வரை கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் மாணவர்களின் கல்வித் தேவையின் அவசியத்தை பூர்த்தி செய்யாது என ஆசிரியர்களும், கல்வியாளர்களும் எடுத்துக் கூறிய நிலையில், அதனை புறந்தள்ளி நான்கு மற்றும் ஐந்து ஆகிய வகுப்புகளுக்கும் இத்திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் நிறைவேற்றப்படுகின்ற இத்திட்டம் போதிய பலனை தரவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் குளறுபடிகளை கைவிட வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்களாலும், கற்றறிந்த நிபுணர்களாலும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என கூறப்படும் இத்திட்டம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதுவே உண்மை. பெற்றோர்களுக்கும் இத்திட்டம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வளவு எதிர்ப்புகள் வருகிறது என்பதற்காகவாவது இத்திட்டத்தை மீள் பார்வை செய்ய அரசு தயாராக இல்லை. கல்வியியல் நிபுணர்களைக் கொண்டு மறுஆய்வு செய்யப்பட வேண்டிய திட்டம் மாறாக, ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் விந்தை இங்கு மட்டும்தான் நடக்கிறது.
இதுகுறித்து ஆசிரியர்களிடம் விமர்சனம் எழுந்ததால், பயிற்சி மாணவர்கள் ஆய்வு செய்தால் ஆசிரியர்களுக்கு எங்கே வலிக்கிறது என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். தற்போது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு ஏதோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு போல் கெடுபிடியுடன் நடைபெறுகிறது. ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, நான்கு முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வினாத்தாள் மூலம் எழுத்து தேர்வு. இதனை நடைமுறைப்படுத்த வகை வகையான விதிமுறைகள்.
காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு, வாய்ப்பு கிடைத்தால் மதியமும் ஒரு அறிவிப்பு என நாளும் மும்மாரி அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வளவு கெடுபிடிகளுடன் தேர்வு நடத்துவது அவசியம் தானா? மூன்று வினாடிகளுக்கு மேல் ஒன்றின் மீது கவனம் செலுத்தாத குறும்பு குழந்தைகள் செல்பேசியில் பார்த்து பதில் சொல்ல வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முரணான எதிர்பார்ப்பு. காலையில் 10 மணிக்கு வினாத்தாள் வெளியிட்ட பிறகு அதனை டவுன்லோட் செய்து, பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்த வேண்டும் என்று சொல்லுவது தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கிடையாது.
கல்விக்கு அதி முக்கியம் வழங்கிடும் நாடுகளிலும் இதுபோன்ற நிலை கிடையாது என்பதை விட, சின்னஞ்சிறு குழந்தைகளிடம் இதை செயல்படுத்தவும் முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் இதனை எல்லாம் தெரிந்து கொண்டே அமல்படுத்த நினைப்பதை என்னவென்று சொல்வது? ஆசிரியர்களை பழிவாங்க வேண்டும் என்பது மட்டுமே அதிகாரிகளுக்கு எண்ணமாக இருக்கிறது.
இதனை கண்காணித்து சரி செய்ய வேண்டிய ஆட்சியாளர்களும் கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள். தமிழகத்தில் தொடக்கக்கல்வி பாழடிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.மாணவர்கள் அனைவருக்கும் கணினிவழங்கி, அதற்குரிய இணையவசதி போன்றவற்றை வழங்கி, அதைபயன்படுத்த பயிற்சிவழங்கிய பின்னர் இதைபயன்படுத்தி கல்விகற்கவாய்ப்பு தந்து, பிறகு தேர்வு
எழுதவாய்ப்பளிப்பதுசரி.ஆனால்எந்த அடிப்படையும் இல்லாமல் கைபேசியைப் பயன்படுத்தி தேர்வு என்பதனால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற மனச்சோர்வு பற்றிசிந்திக்க வேண்டும்.
இதனால் தொடக்கக் கல்வித்துறையில்
மாணவர் சேர்க்கையில் சரிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இந்த எண்ணும் எழுத்தும் என்ற கற்பித்தல் திட்டங்கள் தமிழகத்தின் குழந்தைகளுக்கு போதிய பலனை கொடுக்காது என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். தேவையற்ற குளறுபடிகளை செய்து ஆசிரியர்களை கல்விப் பணி செய்ய விடாமல் மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் செயல்களை கைவிட வேண்டும். ஆன்லைன் தேர்வு, ஒரே மாதிரி வினாத்தாள், உடனடி பதிவிறக்கம், தேவையற்ற தகவல்கள் சேகரிப்பு, உள்ளீடு செய்தல் என நடைமுறை கல்விப்பணிதவிர பிறபணிகளைச் செய்வதற்கான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் ஆசிரியர்களை பழிதீர்ப்பதாக நினைத்துக் கொண்டு எதிர்கால இளம் தலைமுறையை பலியாக்க வேண்டாம். வழக்கமான முறையில் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு, நாளைய தலைமுறையை சிறந்தவர்களாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உரிமையோடும் உள்ளார்ந்த அன்போடும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
ந.ரெங்கராஜன்,
பொதுச்செயலாளர், TESTF.
இணைப் பொதுசெயலாளர், AIPTF.
பொதுச்செயலாளர், WTTC.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக