அக். 16 - மதுரையில் ஒரே வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு, கலைத் திருவிழா என நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் எங்கே, எப்படி, எதில் பங்கேற்க வேண்டும் என்பதில் குழம்பி தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் 6 -8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை வாசிப்பு, கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக அவ்வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அக்., 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. இதுபோல் அக்., 16 முதல் 21 வரை ஆறு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு நடக்கவுள்ள 'கலைத் திருவிழா'வை முன்னிட்டு பள்ளிகள், ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 6 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.,17 முதல் 20 வரை ஆன்லைனில் திறனறிவுத் தேர்வுகள் நடத்தி பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிற்சி, தேர்வு, திருவிழா என மூன்று செயல்பாடுகளிலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது.
அதுபோல் கலைத் திருவிழா, திறனறிவுத் தேர்வில் மாணவர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் 6- 8 மாணவர்களுக்கு 33, ஒன்பது, பத்து மாணவர்களுக்கு 72, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 73 போட்டிகள் நடத்த வேண்டும். இப்போட்டிகள் நடத்தி முடிக்கவே ஆசிரியர்களுக்கு பெரும்பாடாக இருக்கும். கற்பித்தல் பணி கடும் சவாலாக இருக்கும். இதற்கிடையே திறனறிவுத் தேர்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி என ஒரே வாரத்தில் அனைத்தையும் திட்டமிட்டால் மனஉளைச்சல்தான் அதிகரிக்கும். இதுபோல் நெருக்கடியாக திட்டமிடும் திட்டங்கள் பயன்தராது.
கலைத் திருவிழா நடக்கும்போது ஆசிரியர் பயிற்சி அல்லது மாணவர்களுக்கான திறனறிவுத் தேர்வை வேறொரு நாட்களுக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக