படித்ததை மறந்துவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும். படித்ததை மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?
மறக்காமல் படிப்பது எப்படி ?
தற்போதைய சூழ்நிலையில் பல மாணவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள கேள்வி படித்ததை மறக்காமல் இருப்பது எப்படி ? என்பது மட்டுமே. மாணவர்களிடம் இந்தக் கேள்வி எழுவதற்கான காரணம் என்னவென்றால் தற்போது உள்ள மாணவர்கள் அனைவரும் பாடத்தினை புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்வது மட்டுமே.
*பாடத்தை புரிந்து படிப்பது எப்படி ?*
பள்ளி மாணவர்களாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் அல்லது ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களாக இருந்தாலும் அனைவரும் தாங்கள் பயிலும் பாடத்தினை புரிந்து படித்தால் மட்டுமே தங்களுடைய இலக்கை எட்ட முடியும். ஏனென்றால் இந்த போட்டி நிறைந்த உலகில் நாம் நமது மதிப்பெண்களுக்காக புத்தகத்தில் உள்ள அனைத்தையும் மனப்பாடம் செய்து அதை அப்படியே தேர்வில் எழுதினால் மதிப்பெண்களுக்கு மட்டுமே உதவும்.
தங்களுடைய அறிவை பெருக்கிக் கொள்ள அது உதவாது. ஏனென்றால் தற்போது பல போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாத்தாள்கள் அனைத்தும் பாடத்தினை நன்கு உள்நோக்கி கவனித்தால் மட்டுமே விடை அளிக்கும் படியாக வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் எந்த வினாவினை படித்தாலும் அதன் மையக் கருவை தெளிவாக படித்து உணர வேண்டும்
*மையக்கருவை அறிந்து கொள்வது எப்படி ?*
மையக்கருத்து என்பது அந்த பாடம் அல்லது கேள்வியின் விடையை ஒரே வரியில் புரிந்து கொள்வது மட்டுமே. தாங்கள் மையக்கருவை அறியாமலேயே அந்த வினாவிற்கான விடையை முழுமையாக மனப்பாடம் செய்து கொண்டால் தாங்கள் தேர்வு எழுதும்போது ஏதேனும் ஒரு இடத்தில் தடங்கல் ஏற்பட்டால் அதன் பிறகு தங்களால் அந்த விடையினை எழுத முடியாது அதுவே நீங்கள் அந்த வினாவிற்கான மையக்கருவை புரிந்து படித்து இருந்தால் எந்த நேரத்திலும் உங்களுக்கு அந்த வினாவிற்கான மையக்கரு உங்களுக்கு தெரியும் இதை வைத்து தாங்கள் தங்களுடைய சொந்த நடையில் அந்த வினாவிற்கான சரியான விடையை எழுத முடியும் இதையே பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
*புரிந்து படிப்பது எப்படி ?*
ஒரு வினாவினை புரிந்து படிக்க வேண்டும் என்றால் அந்த வினா எந்த மொழியில் இருந்தாலும் முதலில் அந்த வினாவினை தங்களின் சொந்த தாய்மொழிக்கு மாற்றி அமைக்கவும் பின்னர் அந்த வினாவிற்கான விடையையும் தங்கள் தாய்மொழியிலேயே கற்க வேண்டும். ஏனென்றால் யாராக இருந்தாலும் அவர்களுடைய தாய்மொழியில் ஒன்றைக் கற்றுக் கொண்டால் அதனை எப்போதும் மறக்க மாட்டார்கள். எனவே நீங்கள் எதைப் படித்தாலும் உங்களது தாய் மொழியில் அதனை தெளிவாகப் படித்து உணர வேண்டும் பின்னர் அதனை ஆங்கிலத்திலோ அல்லது அங்கு எழுத வேண்டிய மொழியில் எழுதுவதற்கு அந்த மொழியில் உள்ள இலக்கண இலக்கிய நெறிமுறைகளை நன்கு அறிந்து இருந்தால் உங்களால் உங்களுடைய தாய்மொழியில் கற்ற அல்லது புரிந்துகொண்ட விடையினை ஆங்கிலத்திலோ அல்லது அங்கு எழுதவேண்டிய மொழியிலோ சரளமாக எழுதி மொத்த மதிப்பெண்களையும் பெற முடியும்.
ஒரு வினாவினை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அந்த வினாவினை தங்களுடைய நண்பர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமும் கேட்டு அந்த வினா-விடை உங்கள் தாய்மொழியில் புரிந்துகொள்ளுங்கள். அப்போதும் அந்த வினா தங்களுக்கு புரியவில்லை என்றால் அந்த வினாவிற்கான பாடத்தை ஒரு தனித் தாளில் வரைந்து புரிந்துகொள்ள முயற்சிக்கவும். ஏனென்றால் தாங்கள் எதைக் கற்றாலும் அதை படமாக கற்றால் தங்களுடைய மூளையின் சென்று ஆழமாக பதிந்து கொள்ளும். இதற்காகவே பாடப்புத்தகங்களில் அனைத்து செயல்முறைகள் மற்றும் விடைகளுக்கு அருகில் அந்த செயல் முறை அல்லது விடையில் கூறப்பட்டுள்ள முறையை படமாக போட்டு காண்பித்துள்ளனர்.
*படித்ததை மறந்துவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்.*
படித்ததை மறக்காமல் இருக்க வேண்டுமென்றால் நன்றாக படித்து முடித்தபின் அந்த வினாவினை எழுதிப் பார்க்கவும். ஏனென்றால் ஒரு முறை எழுதிப் பார்ப்பது என்பது பத்து முறை படிப்பதற்கு சமமானது. எனவே எந்த வினாவினை படித்தாலும் அந்த வினாவினை படித்து முடித்தபின் எழுதிப் பார்க்கவும் அதை நீங்களே திருத்துங்கள். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ள உதவும் இந்த வினாவினை மறுபடியும் நீங்கள் உங்கள் தேர்வில் எழுதும் போது அந்தப் பிழை உங்களுக்கு வராமல் இருக்கும்..
மீண்டும் மீண்டும் நாங்கள் இறுதியாக கூறுவது ஒன்று மட்டுமே எந்த வினாவினை படித்தாலும் அதை புரிந்து படித்துக் கொள்ளுங்கள். உங்கள் தாய்மொழியில் படியுங்கள் அதுவே அந்த வினாவினை வாழ்நாள் முழுவதற்கும் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக