டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். கடந்த செப்.28ம் தேதி முதல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நினைவு வளாகத்தில் நடைபெற்று வந்த இந்த போராட்டத்தின் 9வது நாளில் ஆசிரியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் அரசாணை 149-ஐ ரத்து செய்யப்படுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக