தமிழக அரசு பாட திட்டத்தில் 6ம் வகுப்பு சமூக அறிவியலில் ‘பொருளியல்’ என்ற பாடமும், தமிழில் ‘வளரும் வணிகம்’ என்ற பாடமும் இந்த பருவத்தில் உள்ளது.
கணிதத்தில் ரூபாய் மற்றும் அளவைகள் கணக்கீடு உள்ளது. வகுப்பறை கற்பித்தலை விட இதை மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ள மாதிரி சந்தை வகுப்பு நடத்த கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் குழுவினர் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரைகள், காய்கறிகள், நெல்லிக்கனிகள், கொய்யா பழங்கள் மேலும் வீட்டில் உள்ள நாட்டு கோழி முட்டைகள், அவித்தகடலை, சுண்டல் போன்ற பொருள்களை பள்ளி திடலில் வைத்து மாதிரி சந்தையை காட்சிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியை தமிழரசி வரவேற்றார். இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் அமைத்த மாதிரி சந்தை விற்பனையை தொடங்கி வைத்து பேசுகையில், ‘மாணவர்கள் இயற்கை விளை பொருட்களை சந்தைபடுத்துதல் மூலமாக தமிழ், சமூக அறிவியல், கணக்கு ஆகிய பாடங்களில் உள்ள பாடப்பொருள்களை ஆர்வத்துடனும், எளிதாகவும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்றார்.
பின்னர் மாதிரி சந்தையில் மாணவர்கள் பொதுமக்கள், பெற்றோர்களிடமும் பொருட்களை விற்பனை செய்து எடை மற்றும் பொருட்களின் விலைக்குரியதொகையினை பெற்றுக் கொண்டு மீதி திருப்பி கொடுப்பது போன்ற கணக்கீடு முறைகளை தெரிந்து கொண்டனர்.
குறிப்பாக மாணவர்கள் எடுத்து வந்த பொருட்கள் செயற்கை உரம் இல்லாமல் விளைந்த பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியமான பொருட்கள் என்று தங்கள் பொருள்களின் தரத்தை எடுத்துக் கூறி விற்பனை செய்தனர்.
தவிர விற்காமல் மீதம் இருந்த காய்கறிகளை சத்துணவு சமைப்பதற்கு மாணவர்கள் அளித்தனர். இதில் ஆசிரியர்கள் முரளி, ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபிணி, பத்மபிரியா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக