இந்த வலைப்பதிவில் தேடு

ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை!

வெள்ளி, 10 நவம்பர், 2023

 



தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கோவையிலும் மழையின் தன்மையை பொறுத்து விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.


ஆனால் நேற்று இரவு முதல் பெரிய அளவிலான மழைப்பொழிவு இல்லை. இதனையடுத்து அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும், அவை வழக்கம்போல் செயல்படும் என்றும் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


அதேவேளையில், கோவை செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை காரணமாக கோவை செல்வ சிந்தாமணி குளம் நிரம்பிய நிலையில் செல்வபுரம், அசோக் நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் நேற்று இரவு வெள்ளம் புகுந்தது.


மேலும், செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலை பள்ளி வளாகம் முழுவதும் வெள்ளநீர் ஆக்கிரமித்துள்ளது.


இதனையடுத்து முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்த நிலையில், இந்த பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது வளாகத்தில் உள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி விடுமுறைக்கு பின்னரே பள்ளி வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent