தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த மாதம் சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த ‘தி கிட்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் ‘தி கிட்’ எனும் மெளனப் படம் திரையிடப்படவுள்ளது. சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த இந்த படமானது 1921-ஆம் ஆண்டு வெளியானது. சாா்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த படத்தை ‘எமிஸ்’ வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். அதற்குமுன் பொறுப்பாசிரியா் அந்த படத்தை பாா்த்து, அதன் கதைச் சுருக்கத்தையும் படித்து, மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.
இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, பள்ளி தலைமை ஆசிரியா்கள் படத்தை மாணவா்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக