அவிநாசி அருகே பெருமாநல்லூரில் ஆசிரியர், வங்கிப் பணி வாங்கித் தருவதாக ரூ.14.50 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
செங்கல்பட்டு, கேளம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர், திண்டுக்கல் கன்னிவாடியைச் சேர்ந்த பழனிசாமி மகன் சின்னையா(46). இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் தனியார் வேலைவாய்ப்பு, கடன் முகவர் அலுவலகம்(கிரேஸ் ஹல்பிங் சென்டர்) வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், இவரிடம் பெருமாநல்லூர், பொடாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மகளுக்கு ஆசிரியர் பணி பெறுவதற்காக ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார்.
இதே போல மாட்டுக் கடன் பெறுவதற்காக அவிநாசி துலுக்கமுத்தூர் கல்லுமடைக் குட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் பழனி என்பவர் ரூ.75 ஆயிரம், அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ரூ.75 ஆயிரம், கோபி, கொளப்பலூரைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் ரூ.1 லட்சம், கோபி, கரட்டடிபாளையம் சத்தியமூர்த்தி என்பவர் ரூ.2 லட்சமும் செலுத்தியுள்ளனர்.
மேலும், அவிநாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த பச்சமுத்து(49) என்பவர் அவரது மகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலக பணியாளர் பணிக்காக ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால், சின்னையா கூறியபடி எந்த வேலையும் வாங்கித் தராமல், காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சின்னையா, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக ரூ.14.50 லட்சம் மோசடி செய்த சின்னையாவை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக