இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் பணி தேர்வில் ஆள்மாறாட்டம்? கல்வித்துறை அதிரடியால் பலர் கலக்கம்!

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

 

பாட்னா, பீஹாரில் ஆசிரியர் பணிக்கான தேர்வில், ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்ததால், புதிதாக பணி நியமனம் பெற்ற, 1.20 லட்சம் ஆசிரியர்களின் விபரங்களை மீண்டும் சரிபார்க்க, மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.


இங்கு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சமீபத்தில், பீஹார் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம், தகுதி தேர்வை நடத்தியது. 'டி.ஆர்.இ., - ௧ மற்றும் டி.ஆர்.இ., - ௨' என, இரு பிரிவுகளாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


இந்த தேர்வுகளில், ஆள்மாறாட்டம் வாயிலாக பலர் தேர்ச்சி பெற்றதாகவும், அதனடிப்படையில் பலர் முறைகேடாக பணி ஆணை பெற்றதாகவும் புகார் எழுந்தது.


இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேர்வில் மூன்று பேர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது.


இதனால், பணியில் சேர்ந்த, 1.20 லட்சம் ஆசிரியர்களின் கைரேகை மற்றும் ஆதார் பதிவுகள், தேர்வுத்தாள் விபரங்களை மீண்டும் சரிபார்க்குமாறு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், பீஹார் பள்ளி கல்வித்துறையின் கூடுதல் செயலர் அறிவுறுத்தி உள்ளார்.


இதுதொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதம்:


ஆசிரியர் பணிக்கு தேர்வான நபர்களை, மாவட்ட கலெக்டர்கள் அழைத்து, அவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்க வேண்டும்.


விரல் ரேகையையும் பதிவு செய்ய வேண்டும். பணி நியமனம் பெற்றவர் தான், தகுதி தேர்வை எழுதினாரா அல்லது தேர்வை வேறு நபர்கள் எழுதினரா என்பதை கண்டறிய வேண்டும்.


தகுதி தேர்வின் போது, பீஹார் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் சேகரித்த விபரங்களுடன், ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களின் விபரங்கள் பொருந்துகின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.


ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சரிபார்த்தல் அவசியம். இவற்றில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent