''தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று தரமான கல்வி. அரசு பள்ளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்குவதன் மூலம் அறிவுசார் மாணவர் சமுதாயம் உருவாகும்,'' என, கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
கல்வித்துறையின் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டம் தனியார் நன்கொடையாளர் சந்திப்பு கூட்டம் மதுரையில் நடந்தது. திட்டத் தலைவர் வேணுசீனிவாசன் தலைமை வகித்தார்.
அமைச்சர் மகேஷ் பேசியதாவது: இத்திட்டத்திற்காக கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பங்களிப்பாக (சி.எஸ்.ஆர்.,) இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் கிடைத்துள்ளது. மதுரை கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் ரூ.51.14 கோடிக்கான ஒப்புதல் கடிதங்களை அளித்துள்ளன.
இந்நிதி மாணவர் நலன், பள்ளி மேம்பாட்டு திட்டங்களுக்காக வெளிப்படை தன்மையுடன் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் தரமான கல்வி அளித்து அறிவுசார் மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி எளிதாக்கப்படும். தரமான கல்வி தமிழக அடையாளங்களில் ஒன்று. வெளிப்படை தன்மை, அரசு செயல்பாடுகள் நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
வேணுசீனிவாசன் பேசுகையில், ''38 ஆயிரம் பள்ளிகள், 50 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அனைவருக்கும் அரசே செய்யும் என காத்திருக்க முடியாது. அதனால் தான் இத்திட்டம் துவக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்கள் சமூக பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும். வருங்கால தலைவர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள், டாக்டர்கள் தமிழகத்தில் இருந்து வரவேண்டும். கற்பித்தலுக்கும், ஆசிரியர்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியம். தொழிலதிபர்களுக்கு அரசு பள்ளிகளை பேணிக் காக்கும் பொறுப்பு உள்ளது,'' என்றார். நன்கொடையாளர்கள் பூரணம்மாள், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.
கல்வித்துறை செயலர் குமரகுருபரன், தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், சி.இ.ஓ., கார்த்திகா, சி.ஐ.ஐ., தமிழ்நாடு தலைவர் சங்கர் வானவராயர், மதுரை தலைவர் தினேஷ் டேவிட்சன், கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்ட உறுப்பினர் செயலர் சுதன் நன்றி கூறினார்.
அனைத்து துறைகளிலும் முன்னிலை:
மதுரையில் கல்வித்துறை சார்பில் ஆறு தென் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார உத்தரவு வழங்கும் விழா துறை செயலர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன் வரவேற்றார். இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன், முத்துபழனிசாமி, கலெக்டர் சங்கீதா, கல்வி துணை இயக்குநர்கள் ஆஞ்சலோ இருதயசாமி, சுவாமிநாதன், சி.இ.ஓ., கார்த்திகா பங்கேற்றனர்.
அமைச்சர் பேசுகையில், ''12,631 பள்ளிகளில் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டுள்ளன. தென் தமிழக கல்வி வளர்ச்சியில் தனியார், சிறுபான்மையினர் பள்ளிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. தற்போது பொது, தனியார் பங்களிப்பு (பி.பி.பி.,) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி உட்பட மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ளோம்,'' என்றார்.
33 பேருக்கு நியமன உத்தரவு
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள்(பி.இ.ஓ.,) 33 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் மகேஷ் பங்கேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக