ஆசியர்களின் பணி தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு உட்பட பல்வேறு உரிமை மற்றும் சலுகைகளைப்பெறுவதில் ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
மேலும், பள்ளி நேரங்களில், வேறுபணிகளுக்கு செல்வதால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதால், அதற்கான அனுமதியும் இல்லை. இதையடுத்து, ஆசிரியர்களின் சிரமத்தை குறைக்க சிறப்பு குறைதீர் முகாம்களை நடத்தி, சிக்கல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டது.
ஆசிரியர்களின் மனுக்களுக்கு, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். ஆசிரியர்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
ஆசிரியர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்கள் சரியானதாக இல்லாத பட்சத்தில், கல்வித்துறை அதிகாரிகள் குறைகளை சுட்டிகாட்ட வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளிகளில் ஆய்வு நடத்த பயன்படுத்தி, சனிக்கிழமைகளில் சிறப்பு குறைதீர் முகாம்களை கட்டாயம் நடத்த வேண்டும்.
சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான பதிவேடு கையாளப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளி கல்வி இயக்குனருக்கு நேரில் சமர்பிக்க வேண்டும். இந்த நடைமுறை துவக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.
அதன்பின், கல்வித்துறையின் உத்தரவுகளை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும், நிதிஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளுக்கும், பயிற்சிகளுக்கும் மட்டுமே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்களின் பிரச்னைகளை மீண்டும் கல்வித்துறையிடம் நேரடியாக எடுத்துசெல்ல சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்த வேண்டுமென, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக