பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்களை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்ற மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு, பிப்ரவரி 10ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன.
இந்நிலையில், பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்களை மாவட்டவாரியாக கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் நேற்று வெளியிட்ட அரசாணை:
நடப்பு கல்விஆண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடப்பதை அடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோரை தேர்வுப் பணிகளை பார்வையிடச் செல்ல அனுமதிக்குமாறு தேர்வுத்துறை இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார். அவரின் கருத்துரு பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவித்துள்ளார்.
இதன்படி 38 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டம்- ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கடப்பிரியா, செங்கல்பட்டு மாவட்டம்- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, திருவள்ளூர் மாவட்டம்- பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, காஞ்சிபுரம் மாவட்டம்- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக