பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழி பாடத்தில் பெறும் மதிப்பெண்ணும் சான்றிதழில் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில்,10-ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் இடம்பெறும். ஒரு பாடத்துக்கு தலா 100வீதம் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். இதுதவிர, தாய்மொழியை விருப்பபாடமாக தேர்வு செய்பவர்களுக்கு விருப்ப மொழி பாடத்துக்கான தேர்வும் தனியாக நடத்தப்படுகிறது. ஆனால், இதில் பெறும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறுவது இல்லை.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கில், விருப்ப மொழி பாடங்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி 4-ல் விருப்ப மொழி பாடத் தேர்வில் மாணவர்கள் பெறும்மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், பிற பாடங்கள்போல இதற்கும் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் (‘பாஸ் மார்க்’) 35 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 6 பாடங்களில் பெறும் மதிப்பெண்கள், அவர்களது சான்றிதழில் குறிப்பிடப்படும். இந்த நடைமுறை வரும் 2024-25-ம் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இனிமேல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழி பாடத்தை தேர்வு செய்தவர்களுக்கு மொத்த மதிப்பெண் 600 என்றும், தேர்வு செய்யாதவர்களுக்கு வழக்கம்போல 500 மதிப்பெண்ணும் கணக்கிடப்ப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக