இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகள் - பெட்ரோல் பங்க் இடையே 30 மீட்டர் இடைவெளி அவசியம் என உத்தரவு

ஞாயிறு, 3 மார்ச், 2024

 




'பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இடையே, 30 மீட்டர் இடைவெளி இருப்பது அவசியம்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


கடலுார் மாவட்டம், கரையேரவிட்டகுப்பம் கிராமத்தில், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மிக அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தை அகற்ற உத்தரவிடக்கோரி, மாவட்ட வளர்ச்சி நுகர்வோர் சங்கம் சார்பில், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, கடலுார் மாவட்டம் கரையேரவிட்டகுப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கும், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கும் இடையே, 30 மீட்டர் இடைவெளி இருப்பதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்து, 50 மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் இருக்க வேண்டும். ஆனால், வேறு வழியே இல்லாத சூழலில் குறைந்தது, 30 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று உள்ளது.


இந்த பெட்ரோல் பங்கிற்கு எந்த அடிப்படையில், 30 மீட்டர் இடைவெளி அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எக்காரணத்தை கொண்டும் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பெட்ரோல் பங்கிற்கும் இடையிலான, 30 மீட்டர் இடைவெளி குறையக்கூடாது. 


தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.வாடகை இடத்தில் தான், இந்த பெட்ரோல் பங்க் உள்ளது. அதனால், வேறு இடத்தில் வைப்பதில் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக, பெட்ரோல் பங்க் உரிமையாளரும், இந்தியல் ஆயில் நிறுவனமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, மார்ச் 5ல் நடக்கும்.


இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent