இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள், பெற்றோர்கள் திடீர் மறியல்

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

 




கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். 


இந்தப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டு விழா நடந்தபோது விழாவை பார்க்க வந்த முன்னாள் மாணவர்கள் சிலர், தற்போதைய மாணவர்களை தாக்கி உள்ளனர். இதில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் மீது மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர்.


இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எறையூர்-ரிஷிவந்தியம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்தை சிறைப்பிடித்து கோஷமிட்டனர். அவர்கள் கூறும்போது, மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், பள்ளியில் மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதலை உண்டாக்கி வரும் உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அவ்வழியே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர்கோட்டை போலீசார் மாணவர்கள் மற்றும் பெற்றோர் களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent