இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.1000 அபராதம்

வியாழன், 14 மார்ச், 2024

 



தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என, தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் வைக்க விரும்பினால், தமிழில் பெரியதாகவும், அடுத்து ஆங்கிலத்திலும் இறுதியாக விருப்ப மொழியிலும், 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.


சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துகள் இடம் பெறவில்லை.


கடந்த மாதம், தொழிலாளர் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்கள், அதிகாரிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், சென்னை தலைமை செயலகத்தில், தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்து ஆலோசித்தனர். ஆனால், வணிகர்கள் இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.


இதுகுறித்து தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், ஏப்ரலுக்குப் பின் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பதையும், அதன்பிறகும் வைக்காவிட்டால் வணிக நிறுவனங்களுக்கான உரிமத்தை ரத்து செய்வது குறித்தும் அரசு முடிவெடுத்துள்ளதை, தமிழ் வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வாயிலாக, மாவட்டந்தோறும் விளக்கி வருகிறோம்.


என்றாலும் தற்போது ஆன்லைன் வியாபாரத்தால் மளிகை, துணி உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளதாகவும், அதனால், புதிதாக பெயர்ப்பலகை வைக்கும் செலவை சமாளிக்க முடியாமல் உள்ளதாகவும் பல வணிகர்கள் கூறினர்.


மேலும், மே மாதத்தில் வணிகர் சங்க மாநாடு நடக்க உள்ளதால் பலர் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனாலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent