தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு முடியும் முன்னரே, மார்ச், 1ம் தேதி முதல், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. மாவட்ட வாரியாக தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று முன்தினம் நிலவரப்படி, 5ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளில், 90,259 பேர்; எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளில், 40,451 பேர் என, 1,30,710 பேர் சேர்ந்துள்ளனர்.
ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான உயர், மேல்நிலை பள்ளிகளில், 15,285 பேர் சேர்ந்துள்ளனர். மொத்தமாக அரசு பள்ளிகளில், 1,45,995 பேர் புதிதாக பதிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மாணவர் சேர்க்கையை அதிகரித்து காட்டுவதற்காக, சில மாவட்டங்களில் மாணவர்களின் விபரங்களில், இரட்டை பதிவுகள், போலி பதிவுகள் செய்வதாகவும், ஒரு பள்ளியில் சேர்ந்த மாணவரை, இன்னொரு பள்ளியிலும் பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவ்வாறு இருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், எமிஸ் என்ற ஆன்லைன் தளத்தில், போலியான இரட்டை பதிவுகள் இல்லாமல் கண்காணிக்க, தொழில்நுட்ப குழுவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக