இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர் சேர்க்கை கணக்கெடுப்பு - பள்ளிக்கல்வித் துறையின் நடவடிக்கையால் சர்ச்சை

புதன், 20 மார்ச், 2024

 



மாணவர் சேர்க்கை குறைந்த அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக கணக்கெடுத்து வருவது சர்ச்சையாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.


இதற்கிடையே இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை தலா 30 பேரும்,6 முதல் 8-ம் வகுப்பு வரை தலா 35 பேரும், 9, 10-ம் வகுப்புக்கு தலா 40 பேரும், 11, 12-ம் வகுப்பில் தலா 50 மாணவர்களும் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்.


இந்நிலையில், தற்போது மாநிலம் முழுதும் சேர்க்கை குறைந்தபள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்துவருவது பெரும் சர்ச்சையாகியுள்ளது.


இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘தொடக்கப் பள்ளிகளில் 10 சதவீதத்துக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளின் விவரங்கள் மாவட்டவாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக நாமக்கல் மொடக்குறிச்சியில் 41 மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


அதாவது, மாணவர் சேர்க்கைக்கு தொடக்கப் பள்ளிகளில் 150 இடங்களும், நடுநிலைப் பள்ளிகளில் 255 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட 74பள்ளிகளில் பெரும்பாலானவைகளில் சொற்ப அளவிலான மாணவர்களே படிக்கின்றனர்.


இத்தகைய பள்ளிகளை மூடிவிட்டு, அருகே உள்ள அரசுப்பள்ளியில் இணைக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்துகிறது. அதன்படி இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், பள்ளிகளை மூடும் விவகாரத்தில் தமிழக அரசே இறுதி முடிவெடுக்கும்’’ என்றனர்.


அதேநேரம், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை இணைக்கும் திட்டம் தேசியகல்விக் கொள்கையின் அம்சமாகும். இதை தமிழக அரசு பின்பற்றக்கூடாது எனவும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் ஏதும் இல்லை. நடப்பாண்டு கள்ளக்குறிச்சி உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை 2.25 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். எனவே, பள்ளிகளை மூடவேண்டிய தேவை இல்லை’’ என்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent