இந்த வலைப்பதிவில் தேடு

ஏப்ரல் 1 : மற்றவரை முட்டாளாக்கும் நாமும் முட்டாளாக்கப்பட்ட தினம் - செல்வ.ரஞ்சித் குமார்

திங்கள், 1 ஏப்ரல், 2024

 



ஏப்ரல் 1 என்றாலே நமது மனதில் எழுவது... April Fool!


இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் வேடிக்கைக்காக மற்றவர்களை ஏமாற்றி நாம் மகிழ்ந்திருப்போம். நாம் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதில் இறுதியாக மகிழ்ச்சி மீந்திருக்கும்.


ஆனால். . . .


ஆட்சியாளர்கள் இருப்பதை இல்லாததாக்கி இல்லாததை இருப்பதைப் போலாக்கி, தனது இன்றைய ஊழியர்களையும். . . . நாளைய ஊழியர்களையும். . . .  ஏன் ஒட்டுமொத்த நாட்டையும் ஒருசேர ஏமாற்றினால். . . . 


`துக்கத்தையும் துயரத்தையும் தவிர வேறு என்ன மீதமாக இருக்கமுடியும்!?`


துக்கத்தையும் துயரத்தையும் தந்து கொண்டிருக்கக்கூடிய அந்த ஏப்ரல் 1 ஏமாற்று வேலை என்ன? எந்தவகையில் யாருக்கெல்லாம் துக்கமும் துயரமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது? அது எப்படி இன்றைய & நாளைய ஊழியர்களை ஒருசேர ஏமாற்ற முடியும்?


பார்க்கலாம். . . .


அதற்குமுன் April Fool-ற்கான மேற்கத்திய வரலாற்றையும் அறிந்து கொள்வோம்.


> தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தில் 16-ஆம் நூற்றாண்டு வரை சூலியன் ஆண்டுக் கணிப்பு முறையின் படி, ஏப்ரல் ஒன்றாம் தேதியே புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. நாம் தற்போது பயன்படுத்தும் சனவரி 1-ல் தொடங்கும் நாள்காட்டியானது, கி.மு 45-ல் ரோமப் பேரரசர் சூலியசு சீசர் உருவாக்கிய சூலியன் நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமாக, சூரியச் சுற்றினை கணக்கில் வைத்து, இயேசு கிறித்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு, உலக வரலாற்றை கிறித்துவிற்கு முன் (கி.மு) & கிறித்துவிற்குப் பின் (கி.பி) என்று பகுத்து, இத்தாலிய மருத்துவர் அலோயிசியசு லிலியசு முன்மொழிய, கிறித்துவத் திருத்தந்தை 13-ஆம் கிரகோரி-யின் அறிவிப்புப்படி 24.02.1582 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நாட்காட்டி கிரெகோரியன் (Gregorian) நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகிறது.


> இவ்வறிவிப்பு வெளிவந்த பின்னரும்கூட, முழுமையான விபரம் தெரியாமல் / புதிய அறிவிப்பை ஏற்க மறுத்து பலர் ஏப்ரல் ஒன்றாம் தேதியையே புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். அவர்களைத்தான் மற்றவர்கள் April Fool என்று பகடி செய்தனர்.  நாளடைவில் சனவரி 1 எந்தளவிற்குப் புத்தாண்டாகப் பரந்து விரிந்து பரவியதோ அதைப்போன்றே April Fool பகடியும் உலகம் முழுக்கப் பரவியுள்ளது.


இனி. . . இந்திய ஒன்றிய மக்களான நமக்குத் துக்கத்தையும் துயரத்தையும் கொடுத்து நாம் திட்டமிட்டு முட்டாள்களாக்கப்பட்டதன் பின்னணி  பற்றி அறிவோம். . .!


இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களோ, மாநில அரசுகளின் ஆட்சியாளர்களோ அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் குடிமக்கள் மட்டத்திற்குச் சென்று பயனளிக்க வேண்டுமானால் அதற்கான பணியைத் திறம்பட செய்து முடிக்கும் பொறுப்பு அரசு ஊழியர்களைச் சார்ந்ததே. அரசு நிருவாகத்தில் ஊழல் எவ்வளவாயிருப்பினும், இன்றுவரை ஒட்டுமொத்த இந்திய அரசு இயந்திரமும் உயிர்ப்போடே இயங்கிக் கொண்டிருப்பதற்கான அடிப்படையே பெரும்பான்மையாக உள்ள நேர்மையான அரசு ஊழியர்கள் தான்.


அத்தகைய அரசு ஊழியராக பணியேற்க வேண்டும் என்ற வேட்கை எந்தவொரு தனிநபருக்கும் தோன்றக் காரணம். . .


`'அரசுப் பணி நிரந்தரப் பணி; பணிப்பாதுகாப்பு உண்டு; பணியின் போது போதிய ஊதியம் கிடைக்கும்; பணி ஓய்விற்குப்பின்னும் ஓய்வூதியம் கிடைக்கும்'` என்பது தான்.


> ஓய்வூதியம் என்றதும் ஏதோ கருணைத் தொகை என்று எண்ணிவிட வேண்டாம். அது ஊழியருக்கு நியாயமாகக் கொடுக்கப்பட வேண்டிய 'கொடுபடா ஊதியம்'.


2011 கணக்கெடுப்பின்படி இந்திய ஒன்றியத்தில் ஒரு லட்சம் மக்களில் 1,622.8 நபர்கள் அரசு ஊழியர்களாக உள்ளனர். (Union Govt Staffs 24.63 Lakhs & State Govts' Staffs 72.18 Lakhs). மக்கள் தொகைக்கேற்ற விகிதாச்சார அடிப்படையில் இவ்வெண்ணிக்கை குறைவானதுதான் என்றாலும் ஓரளவு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தில் பொதுமக்களை வாழவைக்க இந்த அரசு ஊழியர்களைத்தான் அரசு நிருவாகம் பயன்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் 2 - 20 நபர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு ஊழியர் செய்து வருகிறார். எனவே, மக்கட்தொகைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டிய தேவை அரசிற்கு எப்போதுமே உண்டு.


ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் இத்தேவையை நிறைவு செய்ய உலக நிதியம் விடுவதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் ஊதுகுழலாக இருக்கும் பன்னாட்டு நிதியம் தமது ஏகாதிபத்திய எஜமான விசுவாசத்தைக் காட்ட இந்திய ஒன்றித்தின் அரசுப் பணிகளை நிரப்புவதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்து வருவதன் விளைவால்தான் பல்வேறு துறைகளில் காலியாகி வரும் பணியிடங்கள் தொடர்ந்து தற்காலிகப் பணியிடங்களாக / தொகுப்பூதியப் பணியிடங்களாக மாற்றுப்பட்டு வருகின்றன. இதனோட இங்குள்ள ஆட்சியாளர்களின் முதலாளி விசுவாசம் கட்டுக்கடுங்காது கொப்பளிக்க, இன்று பொதுத்துறை நிறுவனங்கள் யாவும் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டன.


மேலும் `ஓய்வூதியத்தைப் பறிப்பதின் வழி அரசுப் பணி மீதான ஈர்ப்பை 100% குறைப்பது; அரசுப் பணி ஏற்போரும் தமது ஓய்வுக் கால தேவையை எதிர்நோக்கி ஊழலுக்குள் வீழ வழிசெய்தல்; அதன் நீட்சியாக அரசு நிருவாகம் சீர்குலைவை நோக்கி நகர்தல்; மறுபுறம் அரசு ஊழியர் & அரசின் 14% பங்களிப்புத் தொகையை மாதந்தோறும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தல்` என்று பல்வேறு வகைகளில் தமது ஆக்டபஸ் கரங்களைப் போர்த்தி இந்திய ஒன்றிய மக்களின் உழைப்பையும், பணத்தையும், இறுதியாக இந்திய ஒன்றியத்தையும் விழுங்கிச் செரிக்க பன்னாட்டு நிதியத்தின் பின்னணியில் மறைந்து காத்திருக்கின்றன உலக ஏகாதிபத்திய நாடுகள்.


இந்திய ஒன்றியத்தையே அழிக்கும் இந்த பன்னாட்டு வேட்டையின் வேட்டை விலங்குகளாக இந்திய ஒன்றிய அரசியல் கட்சியினரில் அநேகர் மாறி பலகாலமாயிற்று. ஆனால், இந்த உண்மையை இதுவரை பெரும்பான்மை மக்கள் உணரக்கூடாதபடி ஆட்சியாளர்களால் அவர்கள் தொடர்ந்து முட்டாளாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர்.


இந்தியர்களை முட்டாளாக்கும் இச்செயல்திட்டத்தின் முதல் விதை விதைக்கப்பட்டது 2004 ஏப்ரல் 1ல்.


ஆம். . . . April Fool என நாம் விளையாட்டாய் ஏமாற்றி மகிழும் அதே தினத்தில் தான் இந்திய ஒன்றியத்தில் அரசுப் பணி ஏற்போருக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகள் அனைத்தும் 100% பறிக்கப்பட்டு NPS எனும் ஓய்வூதிய உறுதியே இல்லாத புதிய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டம் உலக நாடுகள் சிலவற்றுள் கொண்டுவரப்பட்டு தோல்வியடைந்த திட்டம்தான் எனினும் இந்திய ஒன்றியத்தில் மூர்க்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.


அப்போது, இடதுசாரிகள் ஆண்ட மாநிலங்கள் தவிர்த்த அனைத்திலும் NPS நடைமுறைக்கு வந்தது. அன்று முதலே சுமார் 18 ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவரும் சூழலில், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்தை நீக்குதல் தொடர்பாகக் கடந்த காலங்களில் குழுக்கள் அமைத்தன. ஆனால் அமைத்ததோடே சரி. அடுத்தகட்ட நகர்வேதும் இல்லை.


அதேநேரம் பா.ச்ச.க-வோ NPS-ஐ திரும்பப் பெற முடியாது என தொடர்ந்து கூறிவருகிறது.


கடந்த ஓராண்டாக,  `இராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங். & ஆம் ஆத்மி ஆட்சியாளர்கள் இத்திட்டத்தையே இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் துணிச்சலான முடிவை எடுத்து அரசு ஊழியர்களின் நம்பிக்கைக்கு` உரமளித்துள்ளனர்.


காங். & ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ள ~I ~N ~D ~I ~A கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் NPS ஒழிப்பும், அரசுப் பணிக்கான உத்தரவாதமும் இடம்பெற்று அக்கூட்டணி மக்களால் அங்கீகரிக்கப்பட்டு அது சட்டமாகும் பட்சத்தில் மட்டுமே இத்துப்போக வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் அரசு இயந்திரம் தனது அடுத்தகட்ட இயக்கத்திற்குத் தயாராகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent