இந்த வலைப்பதிவில் தேடு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கல்வி - தமிழக அரசு அறிவுறுத்தல்

வியாழன், 13 ஜூன், 2024

 




தமிழ்நாடு அரசு மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி போன்றவை கட்டணம் ஏதும் இல்லாமல் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


இதில் 104 சிறப்புப்பள்ளிகள் விடுதியுடன் செயல்படுகின்றன. விடுதியில் தங்கி கல்வி பயிலும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு எவ்வித கட்டணமின்றி சிறப்பு ஆசிரியர்கள் மூலம் சிறப்பு கல்வி மற்றும் தசைப்பயிற்சியாளர் மூலம் தசைப்பயிற்சி போன்றவை வழங்கப்படுகின்றன.


இவை தவிர விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள் உணவூட்டு மான்யமாக ரூ.1200 மாதம் ஒரு நபருக்கு வழங்கப்படுவதோடு இச்சிறப்பு பள்ளிகளில் உள்ள இரண்டு சிறப்பு ஆசிரியர்கள், ஒரு தசைப்பயிற்சியாளர் என மூன்று நபருக்கு ஊதிய மான்யம் வழங்கப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் விடுதியுடன் கூடிய மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம், தாம்பரத்தில் செயல்பட்டு வருகின்றது. 


இவை மட்டுமின்றி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக 430 பகல் நேர பராமரிப்பு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் வட்டாரத்திற்கு ஒன்று வீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள், தசைப்பயிற்சியாளர்கள் அங்கு வருகின்ற மனவளர்ச்சி குன்றிய மாணவ / மாணவியர்களுக்கு சிறப்புக்கல்வி, மறுவாழ்வு பயிற்சிகள் அளித்து வருகின்றனர். 


இவர்களைத் தவிர ஒவ்வொரு வட்டாரத்திலும் 5 சிறப்பு பயிற்றுனர்கள், 1 தசைப்பயிற்சியாளர்களும் உள்ளனர். அவர்கள் அவ்வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி போன்றவற்றை வழங்குகின்றனர்.


பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீட்டிற்கு சென்று கல்வி, தசைப்பயிற்சி போன்றவற்றை வழங்குகின்றனர். இவை தவிர ஆரம்பகாலத்திலே இச்சிறப்பு குழந்தைகளை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டதிலும் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றது. இம்மையங்களில் ஐந்து சிறப்பாசிரியர்கள் உள்ளனர். 


மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி இல்லம் செயல்படுத்தப்படுகின்றது. இவ்வில்லத்திலும் 40 நபர்கள் வரை தங்கி பயன்பெறுகின்றனர்.


தமிழ்நாடு முழுவதும் 67 மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லங்களில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வில்லத்தினை நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஊதிய மான்யம், உணவூட்டு மான்யம், வாடகை மான்யம் மற்றும் சில்லரை செலவினம் போன்றவை வழங்கப்படுகிறது. 


மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை மேற்கண்ட பள்ளிகள் / இல்லங்கள் / பயிற்சி மையங்களில் சேர்த்து கல்வி மற்றும் பயிற்சிகளை எவ்வித கட்டணமின்றி பெற்று பயனடையுமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent