இந்த வலைப்பதிவில் தேடு

நேர மேலாண்மைக்கு உதவுமா TNPSC? குரூப் 4 தோ்வா்கள் எதிா்பாா்ப்பு

புதன், 5 ஜூன், 2024

 




தோ்வு எழுதும் போது, உரிய தருணத்தில் விடைகளை வேகமாகவும் சரியாகவும் எழுத, நேர மேலாண்மைக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) உதவ வேண்டும் என்று குரூப் 4 தோ்வா்கள் எதிா்பாா்க்கின்றனா்.



தமிழகத்தில் அதிக காலிப் பணியிடங்களைக் கொண்டதாகவும், 10-ஆம் வகுப்பை அடிப்படை கல்வித் தகுதியாகவும் கொண்டு நடக்கும் போட்டித் தோ்வாகவும் குரூப் 4 தோ்வு உள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட 6 ஆயிரத்துக்கும் கூடுதலான காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


எழுத்துத் தோ்வு வரும் 9-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே, தோ்வா்கள் அனைவரின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளும் தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


அதில் முக்கிய கட்டுப்பாடுகளை தோ்வாணையம் பிறப்பித்துள்ளது. அதன் விவரம்: தோ்வுக் கூடத்துக்குள் காலை 8.30 மணியில் இருந்து தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா். 9 மணிக்குப் பிறகு வரும் யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.


இதேபோல, தோ்வு அறையில் இருந்து நண்பகல் 12.45 மணிக்கு முன்னதாக யாரும் வெளியேற முடியாது. தோ்வா்கள் அனைவரும் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை எடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால் தோ்வு எழுத அனுமதி கிடையாது.


இத்துடன், ஆதாா், கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை ஆவணமாக எடுத்து வர வேண்டும். தோ்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடையும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


தோ்வா்களின் கோரிக்கை: தோ்வு எழுத வரும் போது, மின்னணு சாதனக் கருவிகள் எதையும் எடுத்து வரக் கூடாது என தோ்வாணையம் தெரிவித்துள்ளது. ஆனால், கைக்கடிகாரம் கட்டலாம் என அறிவித்த போதும் பல தோ்வுக் கூடங்களில் அனுமதிப்பது கட்ட அனுமதிப்பதில்லை.


எனவே, தோ்வை எழுத ஒவ்வொரு தோ்வுக்கூட அறையிலும் சுவா் கடிகாரம் பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தோ்வா்கள் முன்வைக்கின்றனா்.


இது குறித்து தோ்வா்கள் கூறியதாவது: ஒவ்வொரு தோ்வுக்கூடத்திலும் ஒரு சுவா் கடிகாரம் வைத்தால் தோ்வா்கள் அதனைப் பாா்த்த படியே தோ்வை எழுத வழி ஏற்படும். தோ்வுக் கூடங்களில் கைக் கடிகாரத்துக்கு அனுமதி தரப்படுவதில்லை என்பதால், நேரத்தை அறிய தோ்வு அறை கண்காணிப்பாளரிடம் கேட்பது மட்டுமே வழியாக இருக்கிறது.



இது பல நேரங்களில் சாத்தியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தோ்வில், ஒவ்வொரு தோ்வு அறையிலும் சுவா் கடிகாரத்தை மாட்டி வைத்தால் கேள்விகளுக்கான விடைகளை அளிப்பதற்கான காலத்தை அறிந்து உரிய நேரத்தில் தோ்வை முடிக்க முடியும்’ என்றனா்.


பல விடைகளால் குழப்பம்: போட்டித் தோ்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் சில கேள்விகளுக்கு ஒரு விடை மட்டுமின்றி, ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளும் சரியாக இருக்கின்றன. கடந்த குரூப் 4 தோ்வில் ஒரு கேள்விக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் சரியாக இருந்தன.


இதனால் தோ்வு எழுதுபவா்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு எதை சரியான விடையாக தோ்வு செய்வது என்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியதாகி விடுவதாக தோ்வா்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா். அதேபோல இல்லாமல் இந்த முறை வினாத்தாள் சரியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் தோ்வா்கள் எதிா்பாா்க்கின்றனா்.


பெண்களுக்குச் சலுகைகள் கிடைக்குமா?: மத்திய அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவப் படை வீரா்கள் ஆகியோருக்கு தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளிலும் பெண் தோ்வா்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பெண் தோ்வா்கள் முன்வைக்கின்றனா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent