இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளிகள் பராமரிப்புக்கு முதல்கட்ட மானியம் ரூ.61.53 கோடி விடுவிப்பு

திங்கள், 8 ஜூலை, 2024

 




தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்புச் செலவினங்களுக்காக முதல்கட்டமாக ரூ.61.53 கோடி நிதியானது தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று (ஜூலை 2) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2024-25-ம் கல்வியாண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்துக்காக அரசுப் பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. எனவே, முதல்கட்டமாக 50 சதவீத தொகையை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவதற்காக தற்போது நிதி மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 37,471 அரசுப் பள்ளிகளுக்கும் ரூ.61.53 கோடி நிதி தற்போது விடுவிக்கப்ட்டுள்ளது. இந்தத் தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கையடக்கக் கணினிக்கு (டேப்லெட்) சிம் கார்டு வாங்கவும் (ஓர் ஆசிரியருக்கு தலா ரூ.110) இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


இதேபோல் மாணவர்களுக்கு தனியாக கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர், தூய்மைப் பணிகள், பள்ளிகளுக்கான பொருட்கள் வாங்குதல், கட்டிடப் பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றுக்காக செலவிட வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய காலத்துக்குள் மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும், செலவின அறிக்கையை பயன்பாட்டுச் சான்றிதழுடன் இணைத்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent