கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் நாடு முழுதும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்' என, மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், சி.பி.எஸ்.இ.,யில் படித்த மாணவர்களை விட மாநில கல்வி வாரிய மாணவர்களே அதிகளவு தோல்வியை தழுவியது தெரியவந்துள்ளது.
கடந்த, 2023 - 24 கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் பற்றி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுதும் 56 மாநில கல்வி வாரியங்கள், மூன்று தேசிய கல்வி வாரியங்கள் என மொத்தம் 59 பள்ளி வாரியங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், 2023 - 24 கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தோம்.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வை, மாணவியர் அதிகளவு எழுதியுள்ளனர். ஆனால், தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இது நேர்மாறாக உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 33.5 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதில், 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 28 லட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். உயர்க்கல்வி படிக்கும் மாணவர்களின் விகிதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கருதுகிறோம்.
இதேபோல், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 32.4 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதில், 5.2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 27.2 லட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ.,யில் 6 சதவீத பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். ஆனால், மாநில கல்வி வாரியத்தில் 16 சதவீத மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி விகிதம் மத்திய கல்வி வாரியத்தில் 12 சதவீதமாகவும், மாநில கல்வி வாரியத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. மாநில அளவில், 10ம் வகுப்பில் மத்திய பிரதேசத்திலும், 12ம் வகுப்பில் உத்தர பிரதேசத்திலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
முந்தைய கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2023ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது. எனினும், தேர்ச்சி சதவீதத்தில் மாணவியர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக