மாணவ - மாணவியர் உயர் கல்வி பயில்வதற்கு கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் பலர் பயனடைந்தனர். அதேபோல் இந்த கல்வியாண்டிலும் மாவட்ட நிர்வாகம், தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளது.
வருகிற 28-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் தென்காசி, செங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ - மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம்.
வருகிற 29-ம் தேதி கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கடையம் வட்டார மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். 30-ம் தேதி கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம்.
செப்டம்பர் 3-ம் தேதி கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் நடைபெறும் முகாமில் ஆலங்குளம், கீழப்பாவூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம். செப்டம்பர் 4-ம் தேதி சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம்.
அனைத்து கலை, பொறியியல், பட்டய பொறியியல், மருத்துவம் (பொது, பல், கால்நடை மருத்துவம்), விவசாயம், செவிலியர், சட்டம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி படிப்புக்கான கல்விக்கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ - மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்து இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர்கள், மற்ற மாவட்டங்களில், மற்ற மாநிலங்களில் மற்றும் வெளி நாடுகளில் தற்போது படித்துக்கொண்டு இருக்கும் மாணவ - மாணவியரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது பல்வேறு கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவ - மாணவியரும் கல்விக்கடன் தேவை எனில் படித்து முடித்த கடந்த கல்வி ஆண்டுக்கான மதிப்பெண் சான்றுடன் வந்து இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.
வங்கிகளில் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.4 லட்சம் வரை மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோரின் உறுதிமொழி பத்திரம் தேவை. ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை பிணை தேவையில்லை. ஆனால், மூன்றாம் நபர் உத்தரவாதம் அவசியம். மேலும், நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் (மேனேஜ்மென்ட் கோட்டா, கல்லூரி கவுன்சலிங்கில் கலந்து கொள்ளாதவர்கள்) சேரும் அனைத்து மாணவ - மாணவியருக்கு கட்டாயம் சொத்து பிணை அவசியம்.
தென்காசி மாவட்ட அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் தங்கள் கிளைகளில் பரிசீலனையில் உள்ள கல்விக்கடன் விண்ணப்பத்தையும் மற்றும் கல்விக்கடன் முகாமில் பெறப்படும் கல்விக்கடன் விண்ணப்பத்தையும் பரிசீலனை செய்து மாவட்ட கல்விக்கடன் இலக்கை அடையலாம்.
மேலும், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ - மாணவியர் அனைவரும் www.vidyalakshmi.co.in மற்றும் www.jansamarth.in என்ற இணையதளங்களில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கல்விக்கடன் முகாம் நடைபெறும் தினத்தில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம்.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாத மாணவ - மாணவியருக்கு அனைத்து கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் இணையதளத்தில் பதிவுசெய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக இ-சேவை மையமும் அமைக்கப்பட்டு மாணவ - மாணவியருக்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படும்.
இந்த முகாமில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்துகொண்டு கல்விக் கடன் விண்ணப்பங்கள் பெற்று தகுதியான மாணவ - மாணவியருக்கு கல்விக்கடன் வழங்க, தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் அனைத்து கல்லூரி சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள முன்னோடி வங்கி மேலாளரை கல்லூரி நோடல் பேராசிரியர்களை தொடர்புகொள்ளலாம்.
கல்விக்கடனுக்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -3, பான்கார்டு நகல், மதிப்பெண் சான்றிதழ் நகல்கள், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று நகல், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிட சான்று நகல், கல்லூரி கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட (கவுன்சலிங் சான்று) சேர்க்கைக்கான ஆவண நகல், கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விவரங்களுக்கான சான்று நகல் மற்றும் கல்விக் கடன் பெறும் வங்கியின் பெயர், கணக்கு எண், பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து பயன் பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக