தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோர் உட்பட வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் சுமார் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நியமனத் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைக்கு, தி.மு.க. அரசு செவி சாய்க்காத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 410 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், தமிழக அரசுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2018-ம் ஆண்டுக்கு முன்பாக பின்பற்றப்பட்ட ஆசிரியர் நியமன நடைமுறையின்படியே, அப்போது நடைபெற்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவை பின்பற்றி வழக்கு தொடுத்தவர்கள் மட்டுமல்லாது. அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று (05.08.2024) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, தங்களின் பணிக்காலத்தின், பாதி காலத்தை போராட்டங்களிலேயே கழித்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று. 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக பரிசீலனை செய்து பணி நியமன ஆணைகளை வழங்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக