தமிழகத்தில் 20,678 அரசுப் பள்ளிகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புகையிலை தீமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது குறித்து ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’த் திட்டத்தின் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; பள்ளிக் கல்வித் துறையின் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் உடல்நலத்தை பேணி பாதுகாத்தல் மற்றும் புகையிலையை எதிர்த்து போராடுதலில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.10 லட்சம் மதிப்பில் இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் வரை பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 20,678 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இத்திட்டம் புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் மற்றும் சிகரெட், பிற புகையிலை பொருட்கள் சட்டம் ஆகியவற்றை பின்பற்றி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்களுக்கு மாநில தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் நலனுக்காக இந்த திட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, புகையிலை பொருட்கள் உற்பத்தியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது, புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களை உருவாக்குதல் உட்பட பல்வேறு நோக்கங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக