இந்த வலைப்பதிவில் தேடு

EMIS ஒருங்கிணைப்பாளர்களால் பயனில்லை - டீச்சர்களுக்கு 'டார்ச்சர்' ( தினமலர் செய்தி )

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

 

மதுரையில் 'எமிஸ்' பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர்கள் நியமித்தும் அப்பணிகளை தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்களே கவனிப்பதால் கற்பித்தல் பணிகள் பாதிப்பு தொடர்கிறது


கல்வித்துறையின் எமிஸ் தளத்தில் மாணவர், ஆசிரியர் விபரம் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால் அப்பணிகளை கவனிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியவில்லை என சர்ச்சை எழுந்தது. 


இதையடுத்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளவும், நடுநிலை பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப்களை பராமரிக்கவும் இரண்டு மாதங்களுக்கு முன் தனியார் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்களில் மதுரையில் 200க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.


இவர்கள் ஹைடெக் லேப்களை பராமரிப்பதுடன் அருகே உள்ள இரண்டு அல்லது மூன்று தொடக்க பள்ளிகளில் எமிஸ் பணிகளையும் கவனிக்க வேண்டும். ஆனால் மதுரையில் பெரும்பாலான கல்வி ஒன்றியங்களில் இப்பணிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


அவர்கள் கூறியதாவது: ஏற்கனவே பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டது தொடர்பாக ஒவ்வொரு மாணவரும் பாடம் வாரியாக பெற்ற புத்தகங்களுடன் தனித்தனியே புகைப்படம் எடுத்து எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடக்கிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரத்தை ஆசிரியர்கள் தான் எமிஸில் பதிவேற்றம் செய்கின்றனர்.


இதுபோல் சத்துணவு சாப்பிடும், சாப்பிடாதா மாணவர்கள் விவர படிவங்களை ஒவ்வொரு மாணவருக்கும் போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்யப்படுகிறது. 


இதுதவிர தினமும் ஏராளமான புள்ளிவிபரங்கள் கேட்டும் தலைமையாசிரியர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். இதுபோன்ற பணிகளால் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியவில்லை என அதிருப்தி தெரிவிக்கப்பட்டதால் தான் எமிஸ் பணியை கவனிக்க ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டனர். 


ஆனால் அவர்கள் பொறுப்பேற்ற பின்பும் எந்த தொடக்க பள்ளிகளுக்கும் இதுவரை வரவில்லை. ைஹடெக் லேப்களிலேயே முகாமிடுகின்றனர். இதனால் எமிஸ் பதிவேற்றப் பணிகளை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent