ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக் ஷா) மத்திய அரசுநிதியை நிறுத்தியதால் 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன், செய்முறைப் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 226 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண்மை, இயந்திரவியல், மின்னணுவியல், கணக்குப் பதிவியல், தட்டச்சு உள்ளிட்ட தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில்8,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை தவிர்த்து,செய்முறை மற்றும் வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி அளிக்க ‘அவுட்சோர்சிங்’ முறையில் மாதம்ரூ.22,000 ஊதியத்தில் 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான ஊதியம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியில் இருந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகம் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காததால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு ஜூன் மாதம்விடுவிக்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்களையும் பள்ளிக் கல்வித்துறை பணியில்இருந்து நிறுத்தியது.இதனால்தொழிற்கல்வி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன், செய்முறை பயிற்சி பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் கூறியதாவது: நாங்கள் வேலைவாய்ப்புத் திறன் பாடங்களை நடத்துவதுடன், தொழிற்கல்விக்கான செய்முறை பயிற்சிகளை அளிப்போம். இதுதவிர, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று, மாணவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிப்போம். அதேபோல, சாதித்த தொழில்முனைவோர் மூலம் மாணவர்களுக்கு கவுரவவிரிவுரையாளர் பயிற்சி அளிப்போம்.
மத்திய அரசு நிதி வரவில்லை என்று கூறி எங்களை ஜூன் மாதமே நிறுத்திவிட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் சிரமப்படுகிறோம். மேலும், மாணவர்களும் பயிற்சி பெறாமல் சிரமப்படுகின்றனர். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி ஒதுக்குகின்றன.
தொழிற்கல்விக்கான திட்டத்துக்கு ரூ.20 கோடி இருந்தாலே போதும். இதனால் மத்திய அரசு நிதி தரும் வரை காத்திருக்காமல், மாணவர்கள் நலன் கருதி, மாநில அரசு தங்களது பங்கு நிதியை ஒதுக்கி, மாணவர்களுக்கான பயிற்சியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் விளக்கம்: இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தனியார் நிறுவனம் மூலம்அவுட்சோர்சிங் முறையில் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். நிதிஒதுக்கீடு வராததால், ஊதியம் கொடுக்க முடியாமல் பயிற்றுநர்களை நிறுத்திவிட்டனர்” என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக