அரசுப் பள்ளி, கல்லூரிகளில் உள்ள இலவச நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தோ்தல் அறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானட்டரி நாப்கின் இலவசமாக வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களுடன், நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கு எரியூட்டும் இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது, பள்ளி, கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள அந்த இயந்திரங்களில் நாப்கின்கள் வைக்கப்படவில்லை. முறையாகப் பராமரிக்கப்படாமல் பழுதாகிகாட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.
இதனால் மாணவிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். சில பள்ளி, கல்லூரிகளில் நாப்கின்கள் எரியூட்டும் இயந்திரங்கள் இல்லை என வியாழக்கிழமை நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
தாமாக முன்வந்து விசாரணை: இந்தச் செய்தியின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா், நீதிபதி பாலாஜி அமா்வு, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பெண் வழக்குரைஞா் சங்கம் சாா்பில் வழக்குரைஞா் ஆனந்த வல்லி தாக்கல் செய்த வழக்கில், நாப்கின் இயந்திரங்கள் வைப்பது, பராமரிப்பது தொடா்பாக கடந்த 2016 நவ.25-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியது.
இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்பது செய்தி மூலம் தெரியவருவதால், சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், இந்த வழக்கை செப்.12-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படியும் பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு அமல்படுத்தப்பட்டால், அது தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக