பருவமழை முன்னெச்சரிக்கையாக பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணித் தாய்மார்களை ஒரு வாரத்துக்கு முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பருவகால மழை மற்றும் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்படும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணித் தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து, முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதித்து, பிரசவம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வானிலை ஆய்வு மையத்தால் ‘‘ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாவட்டங்களிலும், பிரசவ தேதி நெருங்கிய 2388 கர்ப்பிணித் தாய்மார்கள் கடந்த 15ம் தேதியிலும், 3314 கர்ப்பிணித் தாய்மார்கள் நேற்றும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரசவ தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள், கடைசிநேர காலதாமதத்தை தவிர்க்க முன்னதாகவே மருத்துவமனையில் சேர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக