இந்த வலைப்பதிவில் தேடு

அரசு ஊழியர்களிடம் 80 லட்சம் ஓட்டுகள் - திண்டுக்கல் சீனிவாசன் வேண்டுகோள்

ஞாயிறு, 24 நவம்பர், 2024

 



கும்பகோணத்தில் நடந்த கட்சியின் கள ஆய்வு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், ''கடந்த சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டு அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கவில்லை,'' என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


அவர் மேலும் பேசியதாவது:


கடந்த சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டேன். ஓட்டு எண்ணிக்கை நடந்தது. 22 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகக் கூறினர். சந்தோஷமாக ஓடிச் சென்றேன். கையெழுத்திட்டு சான்றிதழ் பெறுவதற்கு முன்பாக, துணை தாசில்தார் ஒருவர் வந்தார். 'தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை எண்ணி முடித்த பின் தான், முடிவு அறிவிக்கப்படும்' என்றார்.


தபால் ஓட்டு வாயிலாகவும் எனக்கு குறைந்தது இரண்டாயிரம் ஓட்டுகளாவது கிடைக்கும் என காத்திருந்தேன். ஆனால், ஐந்தாயிரம் ஓட்டுகள் குறைந்து விட்டதாகச் சொன்னார்கள். மொத்தத்தில் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டேன். தபால் ஓட்டுகள் அனைத்தும் தி.மு.க.,வுக்கு போய் விட்டது. ஒரு ஓட்டுக்கூட எனக்குக் கிடைக்கவில்லை. ஓட்டுப் போடுவதில் அவ்வளவு தெளிவானவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்.


எப்படியோ ஜெயிச்சாச்சு... கையெழுத்து போட்டு சான்றிதழை வாங்கிடலாம்னு அவசரப்பட்டேன். பிரசவமானது தாய் தன் பிள்ளையை பார்க்கத் துடிப்பது போல, வெற்றி சான்றிதழை கையில் வாங்கத் துடித்தேன்.


இப்படி மிகத் தெளிவாக ஓட்டளிக்கும் அரசு ஊழியர்கள் தற்போது, தங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். அதனால், அவர்களையெல்லாம் அ.தி.மு.க., பக்கம் வளைக்க வேண்டும். அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் என 80 லட்சம் ஓட்டுகள் அவர்களிடம் உள்ளன. அதை மனதில் வைத்து அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்.


இவ்வாறு சீனிவாசன் பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent