இந்த வலைப்பதிவில் தேடு

'ரூட் தல' மாணவர்களிடம் எழுதி வாங்கி 'கிடுக்கிப்பிடி' போடும் போலீசார்

ஞாயிறு, 3 நவம்பர், 2024

 



பேருந்து, ரயில்களில் கெத்து காட்டும், 'ரூட் தல' மாணவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில், 'இனி எந்த தவறும் செய்ய மாட்டேன்' என, உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கும் போலீசார், இந்நாள், முன்னாள் மாணவர்கள் என, 400 பேரை அடையாளம் கண்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னை மற்றும் சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து, பச்சையப்பன், நந்தனம் கல்லுாரிகள், மாநிலக்கல்லுாரி, புதுக்கல்லுாரிக்கு மாணவர்கள் ரயில், பேருந்துகளில் வந்து செல்கின்றனர். அவர்களில், ரூட் தல மாணவர்கள் கெத்துக்காக, சேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மற்ற மாணவர்கள் இவர்களுக்கு வணக்கம் வைக்க வேண்டும்; பாடச் சொன்னால் பாட வேண்டும்; ஆடச் சொன்னால் ஆட வேண்டும். மாணவர்கள் எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்பதை, ரூட் தல மாணவர்கள்தான் முடிவு செய்வர்.


ஒரே பேருந்தில், இரண்டு ரூட் தல மாணவர்கள் ஏறினால், அவர்களின் தலைமையில் செயல்படும் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது.


அந்த பேருந்தில் மாணவியர் இருந்தால், அவர்களின் கவனத்தை ஈர்க்க, மாணவர்கள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. 'ஏன்தான் இந்த பேருந்தில் ஏறினோமோ' என, நினைக்கும் அளவுக்கு, பயணியருக்கும் தொல்லை தருவர்.


ஒரு ரூட் தல மாணவரின் பின்னால், 15 - 30 மாணவர்கள் இருப்பர். அவர்களுக்கும், மற்ற ரூட் தல மாணவரின்கீழ் செயல்படும் குழுவுக்கும், கெத்து யார் என்பதில் மோதல் வெடித்து, கத்தி, அரிவாளால் வெட்டு, குத்து என, இறங்கிவிடுவர்.


இப்படி ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. பெரும்பாலும் ரூட் தல பிரச்னைகளுக்கு பின்னணியில், முன்னாள் மாணவர்கள் உள்ளனர். அவர்கள்தான் உசுப்பேத்தி, இந்நாள் மாணவர்களை பிரச்னைகளில் தள்ளி விடுகின்றனர்.


லெட்டர்பேடு கட்சிகள், இத்தகைய மாணவர்களை கொத்தாக துாக்கி விடுகின்றன. மாணவர்களை போதை வஸ்துகளுக்கு அடிமையாக்கி, குற்றங்களில் ஈடுபட வைக்கின்றன. கைசெலவுக்கு பணம் கொடுத்து, போஸ்டர் ஒட்டவும் பயன்படுத்துகின்றன.


ரூட் தல மாணவரும், அவரது தலைமையில் செயல்பட்ட மாணவர்களும் பிரச்னைகளில் சிக்கி, வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், எதிர்காலத்தை இழந்தவர்களும், சிறை சென்றவர்களும் உண்டு.


இதனால், மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக, சென்னை மாநகர போலீசார், இந்நாள், முன்னாள் ரூட் தல மாணவர்கள், 400 பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களிடம், 'இனி எந்த தவறும் செய்ய மாட்டேன்' என, உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கி வருகின்றனர்.


இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:


ரூட் தல பிரச்னை காரணமாக, பெரும்பாலும் பேருந்துகள் மற்றும் ரயில் நிலையங்களில் மோதல் சம்பவங்கள் நடக்கின்றன. ஓடும் ரயிலில் சாகசம் செய்வது, பாட்டு பாடுவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.


ஏற்கனவே, 6டி, 27, 29, 53, 12பி, 18கே உள்ளிட்ட பேருந்துகள் செல்லும் வழித்தடங்களில், ரூட் தல மாணவர்கள் மோதிக் கொண்டதால், காலை, மாலை இரு வேளையும் இப்பேருந்துகளை கண்காணித்து வருகிறோம். சாதாரண உடைகளில், பெண் போலீசாரும் பயணித்து கண்காணிக்கின்றனர்.


உறுதிமொழி பத்திரம் பெறப்பட்ட இந்நாள், முன்னாள் மாணவர்கள் பிரச்னையில் ஈடுபட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்படுவர். வன்முறைக்கு துாண்டி விடும், முன்னாள் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent