தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜனவரி 2-ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் கடந்த டிச. 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவர்களை சேர்க்கவும், இறப்பு/ மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது.
இதையடுத்து அனைத்துவித உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஜன.2-ம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும்.
அதேநேரம் இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பெயர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை தன்னிச்சையாக நீக்கக்கூடாது. சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்னரே அத்தகைய மாணவர்களை இறுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக