நீலகிரி மாவட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள, 85 அரசு துவக்கப்பள்ளிகளை மூட நடவடிக்கை எடுத்தால், பழங்குடியினர்; தோட்ட தொழிலாளர்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருவதுடன், தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இதனால், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மறுபுறம் தனியார் மெட்ரிக் பள்ளிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து, தங்கள் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து, 'தங்கள் குழந்தைகளும் ஆங்கில வழி கல்வியை கற்க வேண்டும்,' என்ற ஆவலில் தோட்ட தொழிலாளர்கள் பலர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதன் காரணமாகவும், சில கிராமகள் மற்றும் மாவட்ட எல்லையோரம் நடக்கும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
பள்ளிகளை மூட நடவடிக்கை?
இந்நிலையில், 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடும் வகையில், அந்த பள்ளிகளின் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழை கொடுத்து, அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கையை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் வரும் மார்ச் மாதம் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும், 85- அரசு துவக்கப்பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணியை மேற்கொள்ள கல்வித்துறை வாய்மொழி உத்தரவிட்டு உள்ள நிலையில், அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், 'குன்னுார் ஒன்றியத்தில் 19; கூடலுார் கல்வி மாவட்டத்தில், 18; கோத்தகிரியில், 11; ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில், 37,' என, 85 பள்ளிகளை மூட முதற்கட்ட பட்டிய தயாராகி உள்ளது. மார்ச், 10-ம் தேதிக்குள் இதற்கான பணியை நிறைவு செய்ய வேண்டும்,' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்று திட்டம் அவசியம்
கூடலுார் மற்றும் குன்னுார் கல்வி மாவட்டங்களில், பெரும்பாலான குக்கிராமங்கள், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளன. இப்பகுதி மாணவர்கள் தொலைதுாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று வர சரியாக போக்குவரத்து வசதிகளும் இதுவரை இல்லை. இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்து வாழும் வடமாநில தொழிலாளர்களின், பழங்குடிகளின் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
'இதனை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மாற்று திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்,' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
தொழிலாளர்களாக மாறும் அபாயம்
நீலகிரி பண்டைய பழங்குடியினர் பேரவை நிர்வாகி நீலகண்டன் கூறுகையில்,''மாவட்டத்தில், 85 பள்ளிகளை முடினால், பெரும் பாதிப்பு ஏற்படும். வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மாணவர்கள் உள்ளிட்ட அரசின் தோட்ட நிறுவனமான 'டான்டீ'; தனியார் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும்.
அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை உருவாகும். ஏற்கனவே போத்து கொல்லி பழங்குடி கிராத்தை ஒட்டி செயல்பட்ட துவக்கப்பள்ளி மூடப்பட்டது. இதனால், இப்பகுதி மாணவர்கள் பள்ளி செல்வது இல்லை. இதே நிலை தான் மாவட்ட முழுவதும் ஏற்படும், இதனை தவிர்க்க கல்வி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் கூறுகையில், ''இது குறித்து அலுவலக ரீதியாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு ஏதேனும் உத்தரவுகள் வெளியானால், அது குறித்து, உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக