பள்ளி வகுப்பறையில் சண்டை போட்டு மாணவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இதனைக் கண்ட விளையாட்டு ஆசிரியர் செங்கேணி இரு மாணவர்களுக்கு இடையிலான சண்டையை தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே வி.அகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (11).
நேற்று பள்ளி வகுப்பறையில் சக மாணவருடன் சண்டை போட்டு ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இதனைக் கண்ட விளையாட்டு ஆசிரியர் செங்கேணி என்பவர் இரு மாணவர்களுக்கு இடையிலான சண்டையை தடுத்து நிறுத்தி மாணவர் சங்கரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் தேம்பித் தேம்பி அழுத நிலையில் இருந்த மாணவர் சங்கர், திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அப்பள்ளி ஆசிரியர்களே, மாணவர் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்திருக்கின்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டு மாணவர் சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர் சங்கர் மீது தாக்குதல் நடத்திய விளையாட்டு ஆசிரியர் செங்கேணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 60-க்கும் மேற்பட்டோர், வெ.அகரம் அரசு உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவரின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் மாணவரைத் தாக்கிய ஆசிரியர் செங்கேணியை பணிஇடைநீக்கம் செய்தும், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமியை இடமாற்றம் செய்தும், மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார். இதனால் மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால் பள்ளி வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக