அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தின் போது தற்போது பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 16 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10-11-2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், 20-12-2025 அன்று போட்டித் தேர்வும், பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் நேர்முகத் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிக பட்சம் 15 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிய கல்லூரி முதல்வரிடம் உரிய படிவத்தில் சான்று பெற்று சம்பந்தப் பட்ட மண்டல இயக்குனரிடம் மேலோப்பம் பெற்று சென்னை கல்லூரிக் கல்வி இணை இயக்குனரிடம் ஒப்புதல் கையொப்பம் பெற்று வரும் 10-11-2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் வாய்ப்பு கிடைத்தபோது வெவ்வேறு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி உள்ளனர்.
அவ்வாறு வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு மண்டலங்களில் பணியாற்றியவர்கள் தனித்தனியே அனுபவ சான்றிதழ் பெற வேண்டிய நிலையில் உள்ளனர். உதாரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பணியாற்றியதற்கு தஞ்சாவூர் மண்டல இயக்குனரிடமும், அடுத்த சில ஆண்டுகள் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றியதற்கு வேலூர் மண்டல இயக்குனரிடமும் மேலொப்பம் பெற்றுக் கொண்டு சென்னை சென்று கல்லூரிக் கல்வி இயக்குனரிடம் ஒப்புதல் கையொப்பம் பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
இந்த பணியை மேற்கொள்ள தற்போது பணியாற்றும் கல்லூரிகளில் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியும் பாதிப்பதோடு மட்டுமின்றி விண்ணப்பதாரருக்கும் வீண் அலைச்சல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே முன் அனுபவ சான்று சமர்ப்பிக்க போதிய கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும் என்று கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக