முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அக்டோபர் 12 அன்று நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தியுள்ளனர்.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் என மொத்தம் ஆயிரத்து 996 பணியிடங்களுக்கு செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், அதே நாளில் (28.09.2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Combined Civil Services Examination - II (Group II and II-A Services) தேர்வை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால், மேற்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1, ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 12.10.2025 அன்று நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இதற்கிடையே இந்த தேர்வில் கல்வியியல், உளவியல் மற்றும் பொது அறிவு என கூடுதல் பாடத்திட்டங்களை இணைத்து பழைய பாடத்திட்டம் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அதனால் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் கூறித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கிடையே புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கக்கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்க மறுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வுத் தேதியைத் தள்ளிவைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடப்பாண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு தங்களை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்கிய பின்னர் தேர்வை நடத்த வேண்டும் எனத் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்திவைப்பதோடு, புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாரான பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை தேர்வர்களின் நலன் கருதி ஒத்திவையுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக