ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து பள்ளி ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில், திருச்சி மாநகர செயலாளர் பெர்ஜித் ராஜன், நகரத் தலைவர் ஹக்கிம் அலி உள்ளிட்ட நிர்வாகிகள், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ஏற்கனவே, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக (பிஎல்ஓ) பல ஆண்டுகளாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது தொடங்கியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்காக, கூடுதலாக, பள்ளிகளில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளதால், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகி, கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பள்ளி நேரம் முடிந்தும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். தேர்தல் பணிகளை ஆசிரியர்கள் செய்ய தயாராக உள்ளனர். ஆனால், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணி என்பது தேர்தல் பணி போன்று இல்லாமல், முழு நேரப் பணியாளர்களை நியமித்து செய்ய வேண்டிய பணியாக உள்ளது. எனவே, ஆசிரியர்களை இப்பணியிலிருந்து விடுவித்து அவர்கள் கல்வியை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக