அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி பாரதி தாசன் பல்கலை.க்கு உட்பட்ட தேசியக் கல்லூரி விளையாட்டுத் துறையில் தனது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு பதிவு செய்து, அதற்கான முன்மொழிவை 2021 அக்டோபர் மாதம் சமர்ப்பித்தார்.
‘பள்ளிக் குழந்தைகளின் உடல் திறன் செயல்பாட்டை இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிதல்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான தகவல்களை அமைச்சர் அன்பில் மகேஸ் சேகரித்து, ஆய்வுக் கட்டுரையை தயாரித்தார். முனைவர் பட்ட வழிகாட்டியாக கல்லூரியின் உடற்கல்வி துறை இயக்குநர் டி.பிரசன்ன பாலாஜி இருந்தார்.
இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நேற்று ஆய்வுக் கட்டுரைக்கான வாய்மொழித் தேர்வு தேசியக் கல்லூரியில் நடைபெற்றது.
இத்தேர்வுக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.திருமலைக்குமார் புறத்தேர்வராக இருந்தார்.
அமைச்சரின் ஆய்வுக் கட்டுரை தொடர்பாக உடற்கல்வித்துறை நிபுணர்கள், விளையாட்டுத் துறை ஆர்வலர்கள், பார்வையாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அன்பில் மகேஸ் பதில் அளித்தார். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஸுக்கு முனைவர் பட்டத்தை உறுதி செய்து புறத்தேர்வு பேராசிரியர் சான்றிதழ் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக