மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் பிரபல அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு செய்வதாகவும், வகுப்பறையில் பாடமெடுக்கும் போது, ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவிகளின் புகார் குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மாணவிகள் நேரில் சென்று புகார் கொடுத்துள்ளனர். அதில், “அப்பள்ளியில் பணிபுரியும் ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் தொந்தரவு செய்கிறார். அவருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியரும் செயல்படுகின்றனர். உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்குள் பிரச்சினையை உருவாக்கி இரு கோஷ்டியாக பிரிக்கிறார்.
மாணவர்கள் மது அருந்திவிட்டும் பள்ளிக்கு வருகின்றனர். இதை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை வாடகைக்கு விடுகின்றனர். பள்ளி வகுப்பறைகளில் பீடி, சிகரெட் துண்டுகள் கிடக்கின்றனர்” என குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகிய மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தில் தெற்கு மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக