இந்த வலைப்பதிவில் தேடு

தொடக்க கல்வி ஆசிரியர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம்; டிட்டோஜாக் அறிவிப்பு

திங்கள், 8 டிசம்பர், 2025

 





பல்வேறு கோரிக்கைகளை நிறைவற்ற வலியுறுத்தி சென்னை தொடக்கக்கல்வி இயக்குநரகம் முன்பாக நாளை முதல் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டிட்டோஜாக் அறிவித்துள்ளது.


தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் நடவடிக்கை குழு சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிட்டோஜாக் உயர்மட்ட குழுவை சேர்ந்த தாஸ், மயில் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''திமுக அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் முடிந்துவிட்ட நிலையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.


இதனால் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நான்கு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை களைய வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை 5400க்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு தணிக்கை தடைகளை விதித்து 30 லட்சம் வரை ஓய்வு பெறும் நாளில் 2500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை திரும்ப செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர்.


காத்திருப்பு போராட்டம் குறித்த நோட்டீஸ்


அதனை திரும்ப பெற வேண்டும். SIR பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எம்.காம், பி.எட், எம்.ஏ ஆகிய உயர் படிப்புகளை படித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும்.


தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களை காலவரை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். அரசாணை 243 ஐ ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் சென்னை தொடக்கக் கல்வி இயக்குநரகம் முன்பாக கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.


இதற்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அதற்கு முன்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் நான்கு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எனவே நாளைய தினம் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.


தமிழகம் முழுவதிலும் இருந்து 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும். போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்களை காவல் துறையினரை முன்கூட்டியே கைது செய்யும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது.


நாளை தொடங்கும் இந்த போராட்டம் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டமாக நீடிக்கும். எனவே உடனடியாக அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent