இந்த வலைப்பதிவில் தேடு

மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு

வெள்ளி, 9 ஜனவரி, 2026

 



அரசுப் பொதுத்தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவர்களது கல்வி முன்னேற்றத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுப் பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர்  மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.


 மிக நன்றாக படிக்கக் கூடியவர்கள், சுமாராகப் படிக்கக் கூடியவர்கள், மெல்லக் கற்போர் என மாணவர்களில் மூன்று வகை உண்டு.


நன்றாகப் படிக்கக் கூடியவர்களுக்கு பள்ளி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக காலை நேர மாதிரித் தேர்வுகள் நடத்தி ஊக்கப் படுத்துவதன் மூலம் அந்த மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று ஐஐடி ஜெஇஇ, மருத்துவ நீட் உள்ளிட்ட தேர்வுகளை எளிதில் எதிர் கொண்டு பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வியைத் தொடர்வார்கள்.


 பாடங்களை திருப்புதல் செய்வதன் மூலம் சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். 


மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தனியாக மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்ய முயற்சிக்க வேண்டும். 


இது குறித்து தெரிவித்த வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வி. முத்துக்குமரன், "மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்சக் கற்றல் ஏடுகளை அரசு சார்பில் இலவசமாக வழங்க வேண்டும்.  அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்கள் பெறாத மாணவர்கள் விபரங்களை பட்டியலிட்டு அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும். 


அந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து தனியாக கூட்டம் நடத்தி, அவர்களுடைய குழந்தைகளின் தேர்ச்சியை உறுதி செய்ய மாலை நேரப் பயிற்சி வகுப்புகள் அவசியம் என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.  சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க, பெற்றோர்களின் ஒப்புதலை எழுத்துப் பூர்வமாக பெறவேண்டும். இதன் மூலம் 100 சதவீதத் தேர்ச்சியை உறுதி செய்யலாம். விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது என்று சில பெற்றோர் புகார் தெரிவிப்பதால் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று அரசு அறிவிப்பு வெளியிடுகிறது. 


சிறப்பு வகுப்பு நடத்த சில ஆசிரியர்கள் முன்வந்தாலும் கல்வித்துறையின் நடவடிக்கைக்கு அஞ்சி ஆசிரியர்களும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்த முன்வருவதில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப் படுவது மெல்லக் கற்கும் மாணவர்கள்தான் என்பதை பெற்றோர் உணர்வது இல்லை. போட்டிகள் மிகுந்த இந்த காலத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து இயந்திரமயமாகி வரும் வேளையில் தங்களது குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டும். 


மதிப்பெண்கள் குறைந்தாலும் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் எளிதில் வெற்றி பெறலாம் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். மெல்லக் கற்போர் தமது பெற்றோர் அனுமதியுடன் சிறப்பு வகுப்பில் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent