இந்த வலைப்பதிவில் தேடு

நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தனி ஏற்பாடு

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனியாக, மூடிய அறையில் சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது. திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக மாணவர்கள் 3685 பேர் 2018 ல் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுதினர். மொழி தெரியாத இடத்தில், தேர்வு மையத்தை தேடி மன அழுத்தத்திற்கு ஆளாகினர். இந்த ஆண்டும் நிர்வாக வசதிக்காக வேறு இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தேர்வு மையத்திற்கு கைக்கடிகாரம் கொண்டு செல்ல தடை உள்ளது. மையத்தில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மணியை ஒலிக்கச் செய்கின்றனர். மைய வகுப்பறைகளில் சுவர்க்கடிகாரம் இல்லை. மாணவியரை சோதிக்க பல மையங்களில் தனியறை வசதி இல்லை. சுடிதார் அணியுமாறு கூறுகின்றனர். ஆனால் துப்பட்டா அணிய அனுமதிப்பதில்லை. தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க வேண்டும். தேர்வு எழுதுவோர் நேரத்தை அறிய, மையங்களில் சுவர்க்கடிகாரம் பொருத்த வேண்டும். மாணவியர் துப்பட்டா அணிய அனுமதிக்க வேண்டும். 


மாணவ, மாணவியரை தனித்தனி மூடிய அறைகளில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராம்குமார் ஆதித்தன் மனு செய்தார். நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர்: மாணவ, மாணவியர் எத்தகைய ஆடைகள் அணிந்து மையத்திற்கு வர வேண்டும் என 'ஹால்டிக்கெட்'டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பின்பற்ற வேண்டும். வழக்கமான மரபு சார்ந்த ஆடைகள் அணிந்திருந்தால், அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பரிசோதனை மையத்திற்கு வரவேண்டும். 

மெல்லிய ஆடை அணிய அனுமதி இல்லை. மாணவிகளுக்கு தனியாக, மூடிய அறையில் சோதனை நடத்த ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மையங்களில் சுவர்க்கடிகாரம் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent